குஜராத்தில் நீர்வாழ் உயிரின கூடம், ரோபோடிக்ஸ் அரங்கம், இயற்கை பூங்கா... நாளை தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!

அகமதாபாத் : குஜராத்தில் பல முக்கிய ரயில் திட்டங்களை, பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 16ம் தேதி அன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்நிகழ்ச்சியின் போது, குஜராத் அறிவியல் நகரில் நீர்வாழ் உயிரின கூடம்  மற்றும் ரோபோடிக்ஸ் (எந்திரனியல்) அரங்கத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.ரயில்வே திட்டங்களில், புதிதாக மாற்றியமைக்கப்பட்ட காந்தி நகர் தலைநகர் (கேபிடல்) ரயில் நிலையம், மாகேசனா-வரேதா இடையேயான அகலப்பாதை மற்றும் மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடம், மின்மயமாக்கப்பட்ட சுரேந்திர நகர் - பிபாவாவ் பிரிவு ஆகியவை அடங்கியுள்ளன.காந்திநகர் கேபிடல் - வாரணாசி அதிவிரைவு ரயில் மற்றும் காந்திநகர் கேபிடல் மற்றும் வரேதா இடையே மின்சார ரயில்கள் சேவை ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

காந்திநகர் கேபிடல் ரயல்நிலையம் மறுவடிவமைப்பு

காந்திநகர் கேபிடல் ரயில் நிலையம் ரூ.71 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில், நவீன விமான நிலையங்களுக்கு நிகராக உலகத் தரத்திலான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக இங்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கான சிறப்பு டிக்கெட் கவுன்டர்கள், வழிகள், லிப்ட்கள், பிரத்தியேக வாகன நிறுத்தும் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன.  முழு கட்டிடமும் பசுமை தரத்திலான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன வெளிப்புற முகப்பில், தினசரி கருத்துக்கள்  அடிப்படையிலான 32 கருப்பொருள்கள் விளக்குகளால் ஒளிரும். இந்த ரயில் நிலையத்தி்ல 5 நட்சத்திர விடுதியும் உள்ளது.

மாகேசனா - வரேதா வழித்தடம்

அகலப்பாதையாகவும், மின்வழிப்பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது (வத்நகர் நிலையம் உட்பட) 55 கி.மீ நீளமுள்ள மாகேசனா - வரேதா அகல ரயில் பாதை ரூ.293 கோடி செலவிலும், மின்மயமாக்கம் ரூ.74 கோடி செலவிலும் முடிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மொத்த 10 ரயில் நிலையங்கள் உள்ளன. அவற்றில் விஷ்நகர், வத்நகர், கேராலு மற்றும் வரேதா ஆகிய நான்கு நிலையங்கள் புதிதாக கட்டப்பட்டவை. இந்த வழித்தடத்தில் முக்கிய ரயில் நிலையம் வத்நகர். இது வத்நகர்-மொதேரா-பதன் ஹெரிடேஜ் சுற்று திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. வத்நகர் நிலையம் கற்சிற்பங்களை பயன்படுத்தி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் இயற்கையான நிலப்பரப்புகளுடன்   உள்ளன.  வத்நகர் தற்போது அகல ரயில் பாதை மூலம் இணைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில்  பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் தடையின்றி செல்ல முடியும்.

சுரேந்திர நகர் -பிபாவாவ் பிரிவு மின்மயமாக்கம்.

இத்திட்டம் ரூ.289 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், அகமதாபாத் பாலன்பூரில் இருந்து நாட்டின் இதர பகுதிக்கு பிபாவாவ் துறைமுகம் வரை தடம் மாறாமல் தடையற்ற சரக்கு போக்குவரத்தை வழங்கும். மேலும், இங்கு லோகோ ரயில் இன்ஜின் மாற்றத்தை தவிர்ப்பதன் மூலம்  அகமதாபாத், விராம்கம் மற்றும் சுரேந்திரநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்.

நீர்வாழ் உயிரின கூடம் :

இந்த நவீன நீர்வாழ் உயிரின கூடத்தில், உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த நீர் வாழ் உயிரினங்களுக்கு பிரத்தியேக தொட்டிகள் உள்ளன. முக்கிய தொட்டியில், அரிய வகை சுறாமீன்கள் உள்ளன.  28 மீட்டர் நீளத்துக்கு தனிச்சிறப்பான சுரங்க நடைபாதையும் உள்ளது. இது தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.

ரோபோடிக்ஸ் அரங்கம்:

ரோபோடிக்ஸ் அரங்கம், ரோபோ தொழில்நுட்பங்களின் எல்லைகளை தெரிவிக்கும் கலந்துரையாடல் அரங்கமாக உள்ளது. இது எப்போதும் முன்னேறி கொண்டிருக்கும் ரோபோடிக்ஸ் துறையை ஆய்வு செய்யும் வாய்ப்பை பார்வையாளர்களுக்கு வழங்கும்.  நுழைவாயிலில் பிரம்மாண்டமான டிரான்ஸ்பார்மர் ரோபோவின் (மாறும் திறனுள்ள) மாதிரி இருக்கும். இந்த அரங்கத்தின் வரவேற்பறையில் மனித ரோபா பார்வையாளர்களுடன் பேசி வரவேற்று ஆச்சரியத்தை ஏற்படுத்துவது தனிச்சிறப்பான அம்சமாக இருக்கும். பல துறைகளைச் சேர்ந்த ரோபோக்கள் இங்கு பல தளங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மருத்துவம், வேளாண், விண்வெளி, பாதுகாப்பு துறைகளின் பயன்பாடுகள் மற்றும் அன்றாட வாழ்வில் பயன் ஆகியவற்றை இந்த ரோபோக்கள் செய்து காட்டும்.

இயற்கை பூங்கா:

இந்த பூங்காவில், பனிமூட்ட பூங்கா, சதுரங்க தோட்டம், செல்பி இடங்கள், சிற்ப பூங்கா, வெளிப்புற பிரமை பூங்கா ஆகியவை உள்ளன. இதில் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட சுவாரஸ்யமான தளம் உள்ளது. இந்த பூங்காவில் அழிந்துபோன விலங்குகள்  ராட்சத யானை (Mammoth),   அச்சுறுத்தும் பறவை (Terror Bird), கோரப்பல் சிங்கம் (Saber Tooth Lion) போன்றவற்றின்  சிற்பங்கள் அறிவியல் தகவல்களுடன் நிரம்பியுள்ளன.

Related Stories:

>