×

வேலூர் உட்பட மாநிலம் முழுவதும் இ-சேவை மையங்களில் சர்வர் அடிக்கடி கோளாறு

*சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதி


வேலூர் : வேலூரில் உள்ள இ-சேவை மையங்களில் சர்வர் கோளாறு காரணமாக ஒரு சான்று வழங்க சுமார் 45 நிமிடங்கள் ஆகிறது. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். தமிழகம் முழுவதும் அரசு இ-சேவை மையங்களில், வருவாய் மற்றும் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவை இணையதள சேவை வாயிலாக வழங்கப்படுகின்றன.

மேலும் விவசாய வருமானச் சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், இயற்கை இடர்பாடுகளால் இழந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், ஆண்குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், அடகு வணிகள் உரிமம், கடன் கொடுப்போர் உரிமம் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் வகுப்பு சான்றிதழ் ஆகிய 15 வகையான சான்றிதழ்கள், மின்னாளுமை திட்டத்தில் இ-சேவை மையங்கள் வழியாக வழங்கப்பட்டு வருகிறது.  

ஆனால் கடந்த 2 மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக இ-சேவை மையங்கள் மூடப்பட்டிருந்தது. இதனால் சான்றுகள் பெற முடியாமல் மக்கள் அவதியடைந்தனர். இந்நிலையில் 10 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் உயர்கல்வி படிக்க பல்வேறு சான்றுகளை கேட்டு ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இ-சேவை மையங்களில் குவியத்தொடங்கியுள்ளனர். ஒரேநேரத்தில் மாநிலம் முழுவதும் குவிவதால் இ-சேவை மையங்களில் சர்வர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் மற்றும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் ஏராளமானோர் காலை 8 மணி முதல் இ-சேவை மையங்களில் குவிந்தனர். இதையடுத்து 10 மணியளவில் வந்த இ-சேவை ஊழியர்கள் அனைவரையும் வரிசைப்படுத்தி டோக்கன் வழங்கினர். பின்னர் சான்று வழங்குவதற்கான பணிகள் தொடங்கியதும் சர்வர் கோளாறு ஏற்பட்டது.

 இதனால் ஒருவருக்கு சான்று வழங்க, சுமார் 30 நிமிடம் ஆனது. அடிக்கடி சர்வர் கோளாறு ஏற்படுவதால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினர். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும் பொதுமக்கள் காத்திருந்து சான்றிதழ் வாங்கி சென்று வருகின்றனர். இதேபோன்ற நிலை தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ளதால் இதுதொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Vellore , Vellore, e-service centers , Server issue, Certificates
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...