×

நெல்லையில் அதிகாலை 6 மணி முதல் காத்திருப்பு குறைந்த அளவில் வந்த `கோவாக்சின்’ தடுப்பூசிக்கு அலைமோதிய மக்கள்

*வேகமாக காலியானதால் பலர் ஏமாற்றம்

நெல்லை : நெல்லை  மாவட்டத்தில்  சுமார் ஒரு வார இடைவெளிக்கு பின்னர் நேற்று கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது. 2வது டோஸ் போட அதிகாலை 6 மணி முதல் காத்திருந்த   பலருக்கு தடுப்பூசி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.தமிழகத்திற்கான கோவாக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு ஒன்றிய அரசிடம் இருந்து போதிய அளவு கிடைக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் கோவாக்சின் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. நெல்லை  மாவட்டத்திற்கு கோவாக்சின் தடுப்பூசி வழங்குவதில் தொடர்ந்து   தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் 2ம் டோஸ் போட முடியாமல் பலர்   காத்திருப்பில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று (புதன்) நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி  உள்பட மாவட்டம் முழுவதும் கோவிஷீல்டு  தடுப்பூசியுடன் கோவாக்சின் தடுப்பூசி  போடுவதற்கு ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி  குறைந்த அளவில்  குறிப்பிட்ட மையங்களுக்கு மட்டும் அனுப்பி  வைக்கப்பட்டிருந்தது. இதனால் 2ம் டோஸ் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே போடப்படும் என அறிவிக்கப்பட்டது.

கோவாக்சின்  தடுப்பூசிக்காக நெல்லை அரசு  மருத்துவக்கல்லூரி, பெருமாள்புரம் நகர்ப்புற சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று  அதிகாலை 6 மணி முதல் பொதுமக்கள் திரண்டு வந்து வரிசையில் காத்திருந்தனர்.  நேரம் ெசல்லச் செல்ல கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் மையங்களில் கூட்டம்  அலைமோதியது. ஆனால்  அனைவருக்கும் தடுப்பூசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டது. முதலில்  வந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது.  இதனால் பல இடங்களில் தடுப்பூசி கிடைக்காத மக்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் டாக்டர்கள், போலீசார், சமாதானமாக பேசி அடுத்த முறை வந்ததும் போட ஏற்பாடு  செய்யப்படும் என தெரிவித்து கலைந்து போகச் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் நேற்று கோவாக்சின் தடுப்பூசி களக்காடு  வட்டாரம் திருக்குறுங்குடி,  சேரன்மகாதேவி  வட்டாரம் பத்தமடை ஆரம்ப சுகாதார நிலையம்,  பாப்பாக்குடி வட்டாரம் முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்திற்கு 50  தடுப்பூசிகளும், மானூர் சுகாதார நிலையம், அம்பை  வட்டாரம் வைராவிகுளம் ஆரம்ப சுகாதாரநிலையம், பாளை   வட்டாரம் ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,  நாங்குநேரி வட்டாரம் முனைஞ்சிபட்டி அரசு ஆரம்ப சுகாதார  நிலையம், ராதாபுரம் வட்டாரம் திசையன்விளை ஆரம்ப  சுகாதார நிலையம், ராதாபுரம்  வட்டாரம் பணகுடி   அரசு  ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மையங்களுக்கு 20 முதல் 150 தடுப்பூசிகள் என குறைந்த எண்ணிக்கையில் ஒதுக்கீடு  செய்யப்பட்டன.

 இதுபோல் நெல்லை அரசு மருத்துவகல்லூரி  மருத்துவமனையில் 500  தடுப்பூசிகளும், நெல்லை மாநகராட்சி மீனாட்சிபுரம்,  பேட்டை மற்றும்  பெருமாள்புரம் ஆகிய 3 மையங்களுக்கு மொத்தம் 250 கோவாக்சின்  தடுப்பூசி டோஸ்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட  தடுப்பூசி எண்ணிக்கையை விட பல மடங்கு மக்கள், 2வது டோஸ் தடுப்பூசி போட  மையங்களுக்கு வந்திருந்தனர். எனவே கோவாக்சின் தடுப்பூசி மீண்டும் எப்போது வரும் என பொதுமக்கள் காத்திருக்கின்றனர். அதே  நேரத்தில், கோவிஷீல்டு தடுப்பூசி நேற்று சுமார் 11 ஆயிரம் டோஸ் ஒதுக்கீடு  செய்யப்பட்டிருந்ததால் முதல் மற்றும் 2ம் டோஸ் போடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு  இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து கடந்த 3-மாதங்களுக்கும் மேலாக  தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள  ஆர்வம் காட்டாத பொதுமக்கள், உயிர்பலி அதிகரிப்பால் தடுப்பூசி செலுத்திக்  கொள்வதில் ஆர்வம் காட்ட தொடங்கினர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  முகாம்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியது. கடந்த 10 நாட்களாக  மாவட்டத்தில் உள்ள அனைத்து முகாம்களிலும் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில்  மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகள் வந்தன.

இதனால் சிறப்பு முகாம்களில்  நேற்று காலை முதல் மீண்டும் கெரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு  செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று  தடுப்பூசிகளை சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து செலுத்திக்கொண்டனர்.

Tags : Nelam , Tirunelveli, Corona Vaccine, Covaxine, People Suffering
× RELATED நெல்லையில் ஊரக உள்ளாட்சி தேர்தல்...