9 மாத குண்டர் தடுப்பு சட்டத்தை அனுபவித்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சுற்றிவளைத்த போலீஸ்

*2 கொலை வழக்கு வாரண்டில் மீண்டும் சிறையில் அடைப்பு

சேலம் : சேலம் அன்னதானப்பட்டி செல்லக்குட்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் கோழி பாஸ்கர்(42). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்து வருகிறது. இவர் மீதான வழக்கு சேலம் 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் அனைத்து சாட்சிகளும் விசாரணை முடிந்தநிலையில், திடீரென கோழி பாஸ்கர் தலைமறைவானார்.

இதனால் வழக்கில் இறுதி விசாரணை நின்றுபோனது. இதையடுத்து அவரை பிடிக்க நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கோழி பாஸ்கரை கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. மேலும் அவர் மீது 2 கொலை வழக்கு, 1 கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட் நிலுவையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் 9 மாத சிறைவாசத்திற்கு பிறகு நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணிக்கு சேலம் மத்திய சிறையில் இருந்து கோழி பாஸ்கர் வெளியே வந்தார். அப்போது அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் அங்கிருந்த போலீசார் சுற்றிவளைத்து அவரை பிடித்தனர். நேற்று காலை தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது, தனக்கு உடல்நலம் சரியில்லை எனவும் சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்றும்  கோழி பாஸ்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு வழக்கறிஞர் வீரக்குமார், இதுபோல ஜாமீனில் வெளியே வந்துவிட்டு, 2 ஆண்டுகள் தலைமறைவாகி விட்டார், இதனால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன்கொடுத்தால் மீண்டும் தலைமறைவாகி விடுவார் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரவுடி கோழி பாஸ்கரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கொரோனா பரிசோதனைக்கு பிறகு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

>