×

தியாகமிக்க பொதுவாழ்க்கையில் நூறு வயது காணும் மூத்த தோழர் சங்கரய்யா அவர்களைப் போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

சென்னை: தியாகமிக்க பொதுவாழ்க்கையில் நூறு வயது காணும் மூத்த தோழர் சங்கரய்யா அவர்களைப் போற்றுவோம் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழரும் - தமிழ்நாட்டு அரசியலில் மூத்த தலைவரும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால உறுப்பினருமான மதிப்பிற்குரிய என்.சங்கரய்யா அவர்கள் 100-ஆவது அகவை காணும் சிறப்புமிக்க நாள் இன்று. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் 100 வயதைத் தொட்டு, பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டும் தியாகவாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார் சங்கரய்யா அவர்கள்.

சுதந்திரப் போராட்ட வீரராக, இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டக் களம் கண்டவராக, மாணவர்கள் அமைப்பைக் கட்டமைத்தவராக, பொதுவுடைமை இயக்கத்தின் போராளியாக, ஜனசக்தி - தீக்கதிர் ஏடுகளில் பொறுப்பு வகித்த பத்திரிகையாளராக, மக்கள் உரிமைக்காக சங்கநாதம் எழுப்பிய சட்டமன்ற உறுப்பினராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுச் செயலாளராக சங்கரய்யா அவர்களின் பொதுவாழ்க்கை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. 8 ஆண்டுகள் சிறைவாசம் - 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை என இன்னல்களை இன்முகத்துடன் எதிர்கொண்டு, தியாகத்தின் அடையாளமாக விளங்கும் பொதுவுடைமை இயக்கத் தலைவர் சங்கரய்யா அவர்கள் திராவிட இயக்கத்துடன் மக்கள் நலன் சார்ந்து இணைந்து நின்றவர். தேர்தல் அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் உடன்பட்டும் முரண்பட்டும் இருந்தாலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமதிப்பிற்குரிய தலைவராவார்.

சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு - தீண்டாமை ஒழிப்பு - மதநல்லிணக்க முனைப்பு இவற்றுக்காகத் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு உற்ற துணையாக அவர் நின்றதை மறக்க முடியாது. பொதுவுடைமை இயக்கக் கொள்கைகளில் உறுதிமிக்க சங்கரய்யா அவர்கள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் சொத்தாகத் திகழ்கிறார். வாழும் வரலாறாக நூறாவது பிறந்தநாள் காணும் சங்கரய்யா அவர்கள் மேலும்  பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்து என்னைப் போன்றவர்களுக்கு பொதுவாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்டிட வேண்டும் என்ற அன்புடனும் ஆவலுடனும் நேரில் வந்து வாழ்த்தி - வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன். மதிப்பிற்குரிய மூத்த தோழர் சங்கரய்யா அவர்களின் தியாகத்தையும் எளிமையையும் போற்றுகிறேன். முதலமைச்சர் என்ற முறையில் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நூற்றாண்டு வாழ்த்துகளை அவருக்கு வழங்கி மகிழ்கிறேன்.

Tags : Sankaraya ,Principal ,Stalin , Let us pay tribute to Comrade Sankarayya, who is one hundred years old in his sacrificial public life: Chief Minister Stalin's greetings
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...