×

திருமுல்லைவாயல் நரிக்குறவர் காலனியில் ரூ.33.5 லட்சத்தில் அடிப்படை வசதிகள்: அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கி வைத்தார்

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் நரிக்குறவர் காலனியில் சாலை, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கிவைத்தார். ஆவடி மாநகராட்சி, 12வது வார்டுக்கு உட்பட்ட திருமுல்லைவாயலில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கின்றனர். இந்த காலனிக்கு குடிநீர், சாலை, பாதாள சாக்கடை, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் அறவே இல்லை. இதனால், பொதுமக்கள் பல ஆண்டுகளாக கடும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து கடந்த அதிமுக ஆட்சியிலேயே மாநகராட்சி நிர்வாகத்திடம் மக்கள் தொடர்ந்து புகாரளித்து வந்தனர்.

 ஆனாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அடிப்படை வசதி எதுவும் இன்றி கடும் சிரமப்பட்டனர். இதற்கிடையில், திமுக ஆட்சி வந்தபிறகு, ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசரை நேரில் சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் அடிப்படை வசதிகள் உடனே செய்து கொடுக்கும்படி உத்தரவிட்டார். இதன் பிறகு, மாநகராட்சி அதிகாரிகள் நரிக்குறவர் காலனியை ஆய்வு செய்தனர். பின்னர், அங்கு ரூ.20 லட்சத்தில் சாலை வசதி, ரூ. 8.5 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு, ரூ.2 லட்சம் செலவில் மின்விளக்கு வசதி மற்றும் ரூ.3லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்பணிகளை அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கிவைத்தார். மேலும், திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையில் உள்ள எரிவாயு தகனமேடையில் புகைபோக்கி, தகனமேடை, மின்விளக்குகள், பூங்கா உள்ளிட்டவை சேதமடைந்து கிடந்தன. இதனையும் சீரமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சமீபத்தில், எரிவாயு தகன மேடையில் அனைத்து சீரமைப்பு பணிகளும் முடிவடைந்தது. இதனையும் அமைச்சர் நாசர், ஆய்வுசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

மேற்கண்ட நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்  ஆல்பி ஜான் வர்கீஸ், மாநகராட்சி ஆணையர் நாராயணன், பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர் சங்கர், திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஜெ.ரமேஷ், ஆவடி கிழக்கு பகுதி திமுக செயலாளர் பேபி சேகர், கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags : Laskar ,Tirumullivayal ,Minister ,Audie Nassar , Thirumullaivayal, Narikkuvar Colony,, Basic Amenities, Minister Avadi Nasser
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...