×

தமிழகத்தின் மாமல்லபுரம் மண்ணில் இருந்து தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவி உள்ளது: நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பேட்டி

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, வரலாறு, கலாச்சாரம் இந்த மண்ணில் இருந்துதான் உலகம் முழுவதும் பரவி உள்ளது என அக்குழு தலைவர் கூறினார். டெல்லியில் இருந்து நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் 12 பேர், குடும்பத்துடன் நேற்று மாலை மாமல்லபுரம் வந்தனர். தொல்லியல் துறை மண்டல அலுவலர் மகேஸ்வரி, மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், தொல்லியல் அலுவலர் சரவணன், சுற்றுலா அலுவலர் ராஜாராமன் ஆகியோர், அர்ச்சுணன் தபசு அருகே, அவர்களுக்கு வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்பட அனைத்து புராதன சின்னங்களை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நாடாளுமன்ற நிலைக்குழுவினருக்கு, மூத்த சுற்றுலா வழிகாட்டிகள் மாமல்லபுரத்தின் சிறப்பு மற்றும் சிற்பங்கள் யாரால் உருவாக்கப்பட்டது என்பது குறித்து தெளிவாக எடுத்துக் கூறினர். பின்னர், திமுக எம்பி திருச்சி சிவா கூறுகையில், ‘தமிழகத்துக்கு வருகை தந்து விமான நிலையத்தின் வளர்ச்சி, சுற்றுலா துறையின் வளர்ச்சி, கடல் துறையின் போக்குவரத்து துறை வளர்ச்சி பற்றி ஆய்வு செய்யும்போது, மாமல்லபுரம் பல்லவர் காலத்தில் உருவாகி உலக தொன்மையான சின்னங்களாக பதிவேற்றப்பட்டு இன்றளவும் உலக சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்க்கும் இடமாக உள்ளது.

இதனை மேலும் மேம்படுத்த என்ன செய்யலாம் என்பதற்கும், அதிகளவில் சுற்றுலா பயணிகளை வரவழைக்க என்னென்ன திட்டங்கள் செய்யலாம் என இக்குழுவின் தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நாடாளுமன்ற குழு இங்கு வந்துள்ளது.  இங்கு, சுற்றி பார்க்கும்போது வடமாநிலத்தில் இருந்து வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரவசப்படுகின்றனர். ஏறக்குறைய 16 நூற்றாண்டுகளுக்கு முன்னாள் தொழில்நுட்பம், கலைநுட்பம் சிற்பத்துக்கு தேர்ச்சி பெறும் வல்லமை தமிழர்களாகிய பல்லவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். பல இடங்களை பார்த்துவிட்டு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கூறி மத்திய அரசு மூலம் வளர்ச்சியடைய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

சிற்பங்கள் குறித்து நாடாளுமன்ற நிலைக்கு தலைவர் வெங்கடேஷ் கூறுகையில், ‘தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம் இந்த மண்ணில் இருந்துதான் உலகம் முழுவதும் பரவி உள்ளது’ என்றார்.  முன்னதாக, நாடாளுமன்ற நிலை குழு வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் முழுவதும் டிஎஸ்பி குணசேகரன், இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags : Tamils ,Mamallapuram ,Tamil Nadu ,Chairman of the ,Parliamentary Standing Committee , Mamallapuram, History, Culture, World, Parliament of Tamils
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்