×

72 பேர் பலி, 1200 பேர் கைது தென் ஆப்ரிக்க வன்முறையில் நடக்கும் பயங்கர கொள்ளை

ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடு முழுவதும் தொடங்கிய வன்முறையில் பயங்கர கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. இந்த வன்முறையில் இதுவரை 72 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 2009 முதல் 2018ம் ஆண்டு வரை தென் ஆப்ரிக்காவின் அதிபராக பதவி வகித்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டில் முறையாக பதிலளிக்காததால் உச்ச நீதிமன்றம் இவருக்கு 15 மாத சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து ஜூமா சிறையில் அடைக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க வரலாற்றில் முன்னாள் அதிபர் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறை.

இதனால் ஜூமாவின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். ஜூமா விடுதலையாகும்வரை, தங்கள் போராட்டம் தொடரும் என்று கூறிவரும் அவரது ஆதரவாளர்களால் துவங்கப்பட்ட போராட்டம்,  கடைகளைச் சூறையாடுதல், தீ வைத்தல் போன்ற கலவரங்களாக மாறியதால், ராணுவம் குவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வன்முறையாளர்கள் கடைகளை சூறையாடுதல், ஏடிஎம் மையங்களில் பணத்தை கொள்ளையடித்தலில் தீவிரமாக உள்ளனர்.

பல ஆண்டுகளாக, நாடெங்கும் பரவிவரும் வறுமையால் பொதுமக்களும் சேர்ந்து கடைகளை சூறையாடி கிடைக்கும் பொருட்களை கொள்ளை அடித்து வருகின்றனர். இந்த வன்முறையில் இதுவரை போலீசாரால் 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : South African Violence, Terrorist Robbery, Corruption
× RELATED இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறல்: 11 ஆயிரம் பேர் வெளியேற்றம்