×

இந்தியா-சீனா வீரர்கள் இடையே லடாக்கில் மீண்டும் மோதல்?...ராணுவம் மறுப்பு

புதுடெல்லி:  கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதாக வெளியான  செய்தியை ராணுவம் மறுத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15ம்  தேதி லடாக்கின் கல்வான் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதன் காரணமாக இந்திய-சீன வீரர்களிடையே மோதல் வெடித்தது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து எல்லையில் இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர்.  இருநாட்டுக்கும் போர் ெவடிக்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் மீண்டும் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக பிரபல ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மோதல் நடந்த அதே இடத்தில் உண்மையான கட்டுப்பாடு கோடு பகுதிக்கு மிக அருகில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக அரசு வட்டாரங்கள் கூறுவதாக செய்தியில் குறிப்பிடப்பட்டு  இருந்தது. இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இது முற்றிலும் தவறான செய்தியாகும்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் இரு நாட்டின் வீரர்களுமே ஆக்கிரமிக்கவோ, மோதலில் ஈடுபடவோ முயற்சிக்கவில்லை. எல்லை பிரச்னைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தையை  இந்தியா-சீனா தொடர்ந்து வருகிறது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

பலவீனம் ஆக்குகின்றனர்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒன்றிய அரசை கடுமையாக  சாடியுள்ளார். இது குறித்து ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்திய அரசாங்கமானது வெளிநாடு மற்றும் பாதுகாப்பு கொள்கையை உள்நாட்டு அரசியல் கருவியாக பயன்படுத்துவது நமது நாட்டை பலவீனப்படுத்தியுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : India ,China ,Ladakh , India-China, Ladakh, conflict, military
× RELATED சொல்லிட்டாங்க…