சோனியா, ராகுலுடன் சந்திப்பு எதிரொலி பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் ஐக்கியம்?

புதுடெல்லி: சோனியா, ராகுல், பிரியாங்காவுடனான ஆலோசனையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், விரைவில் காங்கிரசுடன் இணைந்து பிரசாந்த் கிஷோர் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  அடுத்தாண்டு உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், கோவா, இமாச்சல், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே, 2017ம் ஆண்டு பஞ்சாப் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பணியாற்றி வெற்றி பெற்று தந்தார்.

இந்நிலையில், ராகுல் அழைப்பின் பேரில் டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோருடன் பிரசாந்த் கிஷோர் நேற்று முன்தினம் நீண்ட ஆலோசனை நடத்தினார். சமீபத்தில் மேற்கு வங்க தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசுக்கு பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். அத்தேர்தலில் திரிணாமுல் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இனி தேர்தல் வியூக வகுப்பாளர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது நிறுவனத்தை சக பணியாளர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்றும் கூறினார்.

இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் சோனியா, ராகுலை சந்தித்துள்ள நிலையில் அவர் காங்கிரசில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்த பிரசாந்த் பின், பல்வேறு சர்ச்சைகளால் அக்கட்சியிலிருந்து விலகினார். தற்போது காங்கிரசில் இணைந்து மீண்டும் அவர் அரசியல் பணியை தொடர இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: