×

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; வெற்றிப் புள்ளிகளில் மாற்றம்: ஐசிசி அறிவிப்பு

துபாய்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான ஆட்டங்களில் வெற்றி/டிரா முடிவைப் பொறுத்து அணிகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறையில் புதிய மாற்றங்களை ஐசிசி அறிவித்துள்ளது. கிரிக்கெட்டின் ஆரம்பம் டெஸ்ட் போட்டிகள்தான். ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வடிவங்களாக அறிமுகமான ஒருநாள், டி20  ஆட்டங்களுக்கு பிறகு கிரிக்கெட்  அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது.  இந்த நிர்ணயிக்கப்பட்ட ஓவர் ஆட்டங்களுக்கு உலக கோப்பை போட்டியும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 2019ல் முதல்முறையாக டெஸ்ட் போட்டிக்கும் உலக சாம்பியன்ஷிப் நடத்த ஐசிசி முடிவு செய்தது.  

டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற 9 நாடுகள் பங்கேற்க, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் லீக் சுற்றுகள் 2019 ஜூலை முதல் 2021 மார்ச் வரை நடந்தன. வெற்றி விகிதம் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஜூன் மாதம் நடந்த பைனலில் மோதின. இதில் அபாரமாக வென்ற நியூசிலாந்து முதல் சாம்பியனானது. ஆனால், இந்த தொடரில் வெற்றி பெறும் அணிகளுக்கு புள்ளிகளை வழங்கும் முறையில் கடும் குழப்பம் நிலவியது.  தொடர் வெற்றிகளால் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில்  இருந்த இந்தியா,  பிறகு திடீரென வெற்றி விகிதத்தின்  அடிப்படையில் தரவரிசை என மாற்றம் செய்யப்பட்டதால் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இதனால் பைனலுக்கு முன்னேறுவதும் கேள்விக் குறியானது. ஐசிசியின் இந்த குளறுபடி நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.  இந்நிலையில் 2வது  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான லீக் ஆட்டங்கள் 2021 - 2023 வரை நடைபெறும் என்று சில நாட்களுக்கு முன்பு ஐசிசி அறிவித்ததுடன், புள்ளிகள் வழங்கும் முறையில் புதிய மாற்றங்களையும் நேற்று அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஒரு டெஸ்டில் வெற்றி பெறும் அணிக்கு 12 புள்ளிகள் வழங்கப்படும்.  ஆட்டம் சரிசமனில் முடிந்தால் (டை) தலா 6 புள்ளிகளும், டிராவானால் தலா 4 புள்ளிகளும் வழங்கப்படும். தோற்கும் அணிக்கு புள்ளிகள் ஏதும் வழங்கப்படாது. மேலும் 2 டெஸ்ட்கொண்ட தொடருக்கு 24, 3 டெஸ்ட் கொண்ட தொடருக்கு 36,  4 டெஸ்ட் கொண்ட தொடருக்கு 48 புள்ளிகளும்,  5 ஆட்டங்களை கொண்ட தொடருக்கு 60 புள்ளிகளும்  அதிகபட்சமாக அளிக்கப்படும். வெற்றிப் புள்ளிகளின் சதவீத அடிப்படையில் ரேங்கிங் செய்யப்படும்.

அதனடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2023ம் ஆண்டு நடைபெறும் 2வது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி  ஆட்டத்தில் விளையாடும். இந்தியா: இந்த  2வது உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில்  முதல் தொடர் இங்கிலாந்து - இந்தியா இடையே ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தொடங்குகிறது.  தொடர்ந்து  ஆஸ்திரேலியா,  நியூசிலாந்து, இலங்கையுடன் டெஸ்ட் தொடர்களில் இந்தியா உள்நாட்டில்  விளையாட உள்ளது. அடுத்து  வங்கதேசம், தென் ஆப்ரிக்கா நாடுகளுக்கு எதிராக அந்த நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும்.

அதே அணிகள்: முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடிய அதே 9 அணிகள்தான் 2வது தொடரிலும் விளையாட உள்ளன. அதன்படி டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்,  நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் இத்தொடரில் பங்கேற்க உள்ளன.

Tags : World Test Championship ,ICC , World Test Championship, win, ICC
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...