×

மீண்டும் முழு பலத்துடன் இங்கிலாந்து: மோர்கன் தலைமையில் உற்சாகம்

லண்டன்: கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கேப்டன் மோர்கன் உள்பட இங்கிலாந்து அணியின் 9 முன்னணி வீரர்கள், பாகிஸ்தானுடனான டி20 தொடரில் விளையாட உள்ளனர். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு தலா 3  ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. ஒருநாள்  தொடர் தொடங்குவதற்கு முன்பு  இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அதனால் மோர்கன் தலைமையிலான   அணி அப்படியே ‘தனிமை’ப்படுத்தப்பட்டது. அதற்கு பதிலாக பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 9 அறிமுக வீரர்களுடன் புதிய அணி அறிவிக்கப்பட்டது. புதிய வீரர்களாக இருந்தாலும்,  3 ஒருநாள் ஆட்டங்களிலும் அபாரமாக வென்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து. இந்நிலையில் இந்த 2 அணிகளும் மோதும் டி20 தொடர் நாளை தொடங்குகிறது. முதல் ஆட்டம்  நாட்டிங்காமில் நடக்கிறது. இந்த தொடருக்கு இயான் மோர்கன் தலைமையில் மொத்தம் 16 வீரர்கள் அடங்கிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் பழைய அணியில் இருந்த ராய், பேர்ஸ்டோ, மொயீன், பட்லர் உள்பட 9 வீரர்கள் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.

ஒருநாள் தொடரில் விளையாடிய சாகிப் முகமது, கிரிகோரி, டேவிட் மலான், பார்கின்சன் ஆகியோர் தங்கள் இடத்தை தக்கவைத்துள்ளனர். புதிய அணியின் கேப்டனாக இருந்த நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர்  கிறிஸ் சில்வர்வுட் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில்,  இங்கிலாந்தின் தேர்ந்த திறமை வெளிப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ், அவருடன் விளையாடிய வீரர்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். டி20 தொடருக்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள், தனிமைப்படுத்துதலை முடித்து மீண்டும் அணிக்கு  திரும்புகின்றனர்.

ஒருநாள் தொடரில் சாதித்த வீரர்களுக்கு அதற்கான பலனை அளித்துள்ளோம். எங்களின் இந்த அணி தேர்வு முறை   இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்ந்த அணியை உருவாக்க உதவும்’ என்றார். இங்கிலாந்து டி20 அணி: இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜேக் பால், டாம் பான்டன், ஜாஸ் பட்லர், டாம் கரன், லூயிஸ் கிரிகோரி, கிறிஸ் ஜார்டன், லயம் லிவிங்ஸ்டோன், சாகிப் முகமது, டேவிட் மலான், மேட் பார்கின்சன், அடில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லி.

Tags : England ,Morgan , England, Morgan, Cricket,
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்