×

குளத்தில் குளிக்கப்போன ஐந்தே நிமிடத்தில் பரிதாபம் 3 பள்ளி மாணவிகள் உள்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கி பலி: ஒருவரை காப்பாற்ற 4 பேர் முயற்சித்ததால் சோகம்

சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி கரும்புகுப்பம் பகுதியில் அங்காளம்மன் கோயில் குளத்தில் குளிக்கப்போன பள்ளி மாணவியை காப்பாற்ற முயற்சித்த 5 நிமிடத்தில், நீச்சல் தெரியாத காரணத்தால் 3 பள்ளி மாணவிகள், 2 பெண்கள் என 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி, கரும்புகுப்பம், சீதாம்பாள் தெருவை சேர்ந்தவர் சுமதி (30). இவரது மகன் அஸ்வந்து (12), மகள் அஸ்விதா 8ம் வகுப்பு மாணவி (14), மற்றும் நர்மதா 9ம் வகுப்பு மாணவி (12), ஆகியோர் அங்குள்ள அங்காளம்மன் கோயில் குளத்தில் துணி துவைக்க நேற்று காலை சுமார் 11 மணிக்கு சென்றனர். பெண்கள் சுமார் அரை மணிநேரம் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சென்ற மகள்கள் கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நர்மதா என்ற மாணவி குளத்தில் குளிக்கப்போவதாக கூறிவிட்டு நீரில் இறங்கினார். இதில் திடீரென நர்மதா சேற்றில் சிக்கி உயிருக்கு போராடினார்.

உடனே, நர்மதாவின் அம்மா கூச்சலிட்டு அக்கம்பக்கத்தாரை உதவிக்கு அழைத்தார். மேலும் நர்மதாவை காப்பாற்ற, நீச்சலே தெரியாத சுமதி மற்றும் அஸ்விதா ஆகியோர் குளத்தில் இறங்கினர். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர். அப்போது சுமதியின் மகன் அஸ்வந்த், அதே பகுதியை சேர்ந்த  ராஜ் என்பவரிடம் 3 பேர் குளத்தில் மூழ்கி தத்தளிப்பதாக கூறினார். இதையறிந்த அதே பகுதியை சேர்ந்த முனுசாமியின் மனைவி ஜோதிலட்சுமி (32), தேவேந்திரன் மகள் 8ம் வகுப்பு மாணவி ஜீவிதா (14) ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மேற்கண்ட நபர்களை காப்பாற்ற குளத்தில் இறங்கினர். அவர்களுக்கும் நீச்சல் தெரியாத காரணத்தால், சேற்றில் சிக்கினர் உயிருக்கு போராடினர். இவ்வாறாக 5 நிமிடத்தில் 5 பேரும் குளத்தில் மூழ்கி இறந்தனர்.

தகவலறிந்த கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்துக்கும் சிப்காட் தீயணைப்பு துறை வீரர்களுக்கும் மற்றும் வட்டாட்சியர் மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் சிப்காட் தீயணைப்புத்துறை வீரர்கள் குளத்தில் மூழ்கிய நபர்களை சடலமாக மீட்டனர். சிப்காட் போலீசார், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மேற்கண்ட குளத்தைச்சுற்றி மின்வேலி அமைக்கப்படும். அதோடு இந்தப்பகுதி மிக ஆழம் அதிகம் உள்ள பகுதி. எனவே இங்கு எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

* இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்
இந்த அசம்பாவித சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குளத்தில் மூழ்கி பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Tags : Five people, including 3 schoolgirls, drown in the fifth minute after taking a bath in the pool: 4 people try to save one
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை