தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களை திருப்பதிக்கு இணையாக மாற்ற அறநிலையத்துறை சார்பில் வரும் 17ம் தேதி சிறப்பு கூட்டம்

* 40 ஆயிரம் கோரிக்கை மனுக்களை விசாரிக்க ஆணையர் தலைமையில் குழு

* அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழகத்தில்  உள்ள முக்கிய கோயில்களை திருப்பதிக்கு இணையாக மாற்ற, வரும் 17ம் தேதி  இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. மேலும்  கோயில்கள் வரவு, செலவு கணக்கு விவரங்கள் விரைவில் இணையதளத்தில்  வெளியிடப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். வேளச்சேரி ராம்நகரில் உள்ள வாசுதேவ பெருமாள் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், எம்எல்ஏக்கள் அசான் மவுலானா, பிரபாகர் ராஜா, இணை ஆணையர் ரேணுகாதேவி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வேளச்சேரி தண்டிஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக வெங்கடேஸ்வரா நகரில் ஒரு ஏக்கர் 94 செண்ட் ஆக்கிரமிப்பு இடத்தையும், தண்டீஸ்வரர் நகர் 7வது மெயின்ரோட்டில் 1.55 ஏக்கர் இடத்தையும், தண்டிஸ்வரர் கோயில் மற்றும் யோகநரசிம்மர் கோயில்களுக்கு சொந்தமாக எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள 137 செண்ட் நிலத்தையும் பார்வையிட்ட அமைச்சர் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதுகாப்பு வேலிகள் அமைத்து கோயில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்மாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.        

இந்த ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:இந்து  அறநிலையத்துறை சார்பில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடக்காத  கோயில்களை கண்டறிந்து அவற்றிற்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 100 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கோயில்களில் திருக்குளங்கள் சீரமைக்கவும், நந்தவனங்களை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோயில்களின் வரவு செலவு கணக்கு விவரங்களை  இணையதளத்தில் வெளியிடுவது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

அறநிலையத்துறையில்  கோரிக்கைகளை பதிவிடுக என்ற திட்டத்தின் மூலம் இணையதளம்வாயிலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளும், மனுவாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகள்  வந்துள்ளது.பக்தர்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் சிலைகள் பாதுகாப்பு மற்றும் களவுபோன சிலைகள் மீட்பு தொடர்பான நடவடிக்கைகள் சிலைகள் பாதுகாப்பு தடுப்பு காவல் பிரிவுடன் இணைந்து துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 1 வருடத்திற்குள்  அனைவரும் வியப்படையும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கை  வெளிப்படை தன்மையோடு நிறைவேற்றப்பட்டு இருக்கும். தமிழகத்தில் உள்ள முக்கிய  கோயில்கள் திருப்பதிக்கு இணையாக மாற்ற, வரும் 17ம் தேதி இந்து  அறநிலையத்துறை சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

* ஒரே நாளில் 4 கோயில்களில் ஆய்வு

சென்னையில் ஒரே நாளில் வேளச்சேரி வாசுதேவ பெருமாள், யோகநரசிம்மர் கோயில், ஸ்ரீ தண்டிஸ்வரர் கோயில், கே.கே.நகர் சக்திவிநாயகர் கோயில் ஆகிய 4 கோயில்களில் ஆக்கிமிப்புகள் அகற்றுதல் மற்றும் திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  நேரில் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>