வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினர் தாமதமின்றி மக்கள் கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறையின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், புதியதாகச் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் முதல்வர் வழங்கிய அறிவுறுத்தல்கள்: தாமதமின்றி மக்கள் கோரிக்கைகளைத் தீர்த்து வைக்க வேண்டும். குறிப்பாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையால் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வுகாணவும், இணையத்தின் வாயிலாகத் துரிதமாகத் துறை சார்ந்த சான்றிதழ்களை வழங்க வேண்டும். பேரிடர் மேலாண்மை நிர்வாக அமைப்பை வலுப்படுத்தவும், வெள்ளம் மற்றும் வறட்சி நிலைகள் குறித்தும், மழை அளவைத் துல்லியமாகக் கண்காணிக்க அதிக அளவில் மழைமானிகள் அமைக்க வேண்டும்.

மாநிலத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவினைத் தினமும் கண்காணித்து வடிநிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்த எச்சரிக்கைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தும் வகையில் நிகழ்நேர வெள்ள முன்கணிப்பு அமைப்பு ஏற்படுத்திட வேண்டும். மழை வெள்ளக் காலங்களில் மக்கள் அல்லல்படுவது முற்றிலும் தவிர்க்கப்படவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக நிவாரணப் பொருட்கள் / மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆழ்கடலில் உள்ள மீனவர்களுடனான தொலைத்தொடர்பை மேம்படுத்துவதுடன், உயிருக்கும், உடைமைகளுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, புதிய முன்னெடுப்பு மூலம் உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்களின்  அவசரத் தேவை உள்ளவர்களையும், அதனை வழங்கத் தயாராக உள்ள ஆர்வலர்களையும் இணைக்கும் வகையில் இணையவழி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

 

இணையவழிப் பட்டா மாறுதல்கள், நில ஆவணங்களை நவீனப்படுத்துதல், கிராம வரைபடங்களை நவீனமயமாக்குதல், நிலம் தொடர்பான மேல்முறையீடுகளை இணையவழியில் மேற்கொள்ளும் வசதி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.

வீட்டுமனை ஒப்பந்தத்தில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள், மூன்று மாதச் செயல்திட்டம், தினசரிக் கண்காணிப்பு, நீர்ப்பகுதி புறம்போக்கில் வசிப்பவர்களுக்குக் காலியாக உள்ள மாற்று நிலம் கண்டறிந்து ஊரக வளர்ச்சித்துறை / குடிசை மாற்று வாரியம் மூலம் வீட்டு வசதி ஏற்படுத்தித்தரவும், நில எடுப்பினைச் சீர் செய்யவும், நில எடுப்பின் போது கால தாமதத்தினைத் தவிர்க்கவும், தமிழ்நாடு சமூகத் தாக்க மதிப்பீட்டுப் பிரிவை ஏற்படுத்தி, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்குத் தனி அலகினை நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் அமைக்க வேண்டும்.

தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும், பொது அறக்கட்டளைகளுக்கும் தேவைப்படும் நிலங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்தி இணையதளம் மூலம் 6 மாதக் காலத்திற்குள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை எளியோருக்கு வீட்டுமனை மாற்று இடம், விரைவான பட்டா மாறுதல், அரசு நிலங்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாத்தல், நில எடுப்புக்கு விரைவான, நியாயமான இழப்பீடு வழங்குதல், அரசுத் திட்டங்கள், நில மாற்றம்/ பரிவர்த்தனை/ குத்தகை மூலம் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டு, தெளிவான நில ஆவணங்கள் கிடைக்கவும், நில உரிமையை உறுதிப்படுத்தும் நிலவரித்திட்டத்தினை துறை மூலம் திறம்படச் செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தினார். மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்குத் தனி அலகினை நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் அமைக்க வேண்டும்.

Related Stories:

>