×

ஏடிபி தரவரிசை முதலிடத்தில் நீடிக்கிறார் ஜோகோவிச்

லண்டன்: விம்பிள்டனில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றிய செர்பியாவின் டென்னிஸ் வீரர் ஜோகோவிச், ஏடிபி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். விம்பிள்டன் பைனலில் இவருடன் மோதிய இத்தாலியின் இளம் வீரர் மாட்டியோ பெரட்டினி, தரவரிசையில் 9ம் இடத்தில் இருந்து 8ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஒபன் மற்றும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் தொடர்ந்து ஆடவர் ஒற்றையர் பட்டங்களை கைப்பற்றியதன் மூலம் ஏடிபி தரவரிசையில் நோவாக் ஜோகோவிச், 12,113 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ் 10,370 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், ஸ்பெயினின் ரஃபேல் நடால் 8,270 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.

4ம் இடத்தில் கிரீசின் ஸ்டெபனாஸ் சிட்சிபாசும் (8,150), 5ம் இடத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவும் (7,475 புள்ளிகள்) உள்ளனர்.  இந்த ஆண்டு விம்பிள்டனில் ரன்னர் கோப்பையை கைப்பற்றிய, இத்தாலியின் இளம் வீரர் பெரட்டினி (5,488 புள்ளிகள்), தரவரிசையில் 9ம் இடத்தில் இருந்து, 8ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 8ம் இடத்தில் இருந்த முன்னாள் நம்பர் 1 வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (4,215 புள்ளிகள்), 9ம் இடத்திற்கு இறங்கியுள்ளார்.

இளம் வீரர்களில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 6ம் இடத்திலும் (7,425 புள்ளிகள்), ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரப்லெவ் (6,255 புள்ளிகள்) 7ம் இடத்திலும் உள்ளனர். கனடா வீரர் டெனிஸ் ஷபலோவ் (3,625 புள்ளிகள்) 10ம் இடத்திலும், விம்பிள்டன் காலிறுதியில் பெடரரை வீழ்த்திய போலந்தின் இளம் வீரர் ஹியூபர்ட் ஹர்காச் (3,163 புள்ளிகள்) 11ம் இடத்திலும் உள்ளனர்.


Tags : Djokovic ,ATP , ATP Rankings, No. 1, Djokovic
× RELATED சில்லி பாயின்ட்…