×

பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, அரசு துறைகளின் கட்டிடங்களை தரமாக அமைக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை:  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி, மருத்துவமனை மற்றும் அரசு துறைக் கட்டிடங்களை விரைவாகவும், தரமாகவும் அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.   பொதுப்பணித்துறையின் செயல்பாடுகள் குறித்தும், புதிதாக செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத் உள்ளிட்ட அதிகாரிகள்கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில், மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரில் சர்வதேச தரத்திலான பொது நூலகம், சென்னை, கிண்டியிலுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு நினைவகம் அமைப்பது, 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுதடைந்த சென்னை, வள்ளுவர் கோட்டத்தை புனரமைத்து, அங்கு ஆய்வுக்கூடம் மற்றும் நூலகம் அமைத்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

 அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டிடங்கள், மருத்துவமனைக் கட்டிடங்கள் மற்றும் அரசு துறைக் கட்டடங்களை விரைவாகவும், தரமாகவும் உரிய காலத்தில் கட்டி முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பொதுப்பணித்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள், ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றிற்காக கட்டப்படும் கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
 
சிவகங்கை மாவட்டம், கீழடி அகழ் வைப்பக கட்டட வளாகம் மற்றும் பல்வேறு பாரம்பரியக் கட்டிடங்களைப் புனரமைப்பு பணி, புதிதாக கட்டப்பட்டுவரும் 6 மாவட்ட கலெக்டர் அலுவலகக் கட்டிடங்கள், நீதிமன்றம் மற்றும் சட்டக் கல்லூரிகளுக்காக கட்டப்படும் கட்டிடங்களின், சேலம் மாவட்டம், தலைவாசலில் கட்டப்பட்டு வரும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடங்கள் என அனைத்து அரசுக் கட்டிடங்களையும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தரமாக கட்டி முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Stalin , மு.க.ஸ்டாலின்
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...