×

பாபர் அசாமின் சதம் வீண்: 3வது போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி: 0-3 என பாகிஸ்தான் ஒயிட்வாஷ்

பர்மிங்காம்: இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பர்மிங்காமில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில், பக்கர் ஜமான் 6 ரன்னில் வெளியேற மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல்ஹக் 56 ரன் எடுத்தார். கேப்டன் பாபர் அசாம் 139 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 158 ரன் எடுத்தார். விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், 58 பந்தில் 74 ரன் எடுத்தார். 50 ஓவரில் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 331 ரன் எடுத்தது. இங்கிலாந்து பந்து வீச்சில், பிரைடன் கார்ஸ் 5, சாகிப் மக்முத் 3 விக்கெட் வீழ்த்தினர்.  

பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில், டேவிட் மலன் டக்அவுட் ஆக, பில் சால்ட் 37, ஜாக் கிராலி 39 ரன் எடுத்தனர். சிறப்பாக ஆடிய ஜேம்ஸ் வின்ஸ் 95 பந்தில் 11 பவுண்டரியுடன் 102, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 32, லூயிஸ் கிரிகோரி 69 பந்தில், 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 77 ரன் அடித்தனர். 48 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 332 எடுத்த இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் 2 போட்டியிலும் தோல்வியடைந்த பாகிஸ்தான் 0-3 என ஒயிட்வாஷ் ஆனது. இங்கிலாந்தின் ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டநாயகன் விருதும், சாகிப் மக்முத்  தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
தொடரை கைப்பற்றியதன் மூலம் உலக கோப்பை சூப்பர் லீக் பட்டியலில் இங்கிலாந்து 15 போட்டியில் ஆடி 9 வெற்றி, 5 தோல்வி என 95 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. அடுத்ததாக இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் நாட்டிங்காமில் நடக்கிறது.

பாபர் அசாம் புதிய சாதனை
நேற்று பாபர் அசாம் அடித்தது ஒருநாள் போட்டியில் அவரின் 14வது சதமாகும். இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் பாகிஸ்தான் கேப்டன் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். மேலும் குறைந்த இன்னிங்சில் (81 இன்னிங்சில்) 14வது சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன் தென்னாப்பிரிக்க வீரர் ஹாசிம் அம்லா 84 இன்னிங்சில் 14வது சதம் விளாசியதே சாதனையாக இருந்தது.

Tags : Babur Assam ,England ,Pakistan , England, ODI, win
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்