×

நாமக்கல் சிறுமி மருந்துக்கான ரூ.6 கோடி இறக்குமதி வரியை நீக்கிய நிர்மலா சீதாராமன் : சிறுமிக்கு இன்னொரு தாயாக மாறினீர் என வானதி ட்வீட்!!

நாமக்கல் : முதுகுத்தண்டுவடப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட நாமக்கல் சிறுமி மித்ராவுக்கான மருந்தின் மீதான 6 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீக்கியிருப்பதாக, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த, 23 மாத பெண் குழந்தை மித்ரா,Autosomal Recessive Spinal Muscular Atropy (SMA)) என்ற, அரிய வகை மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அக்குழந்தையால் நடக்க முடியாது. உரிய மருத்துவம் அளிக்க முடியாத நிலையில், உயிருக்கும் ஆபத்து வரும் சூழலுக்கு அக்குழந்தை தள்ளப்பட்டது .

குழந்தை மித்ரா சிகிச்சைக்கு தேவையான ரூ.16 கோடி தன்னார்வலர்களிடம் இருந்து கிடைத்துள்ளது. ஆனாலும் அந்த மருந்தை இறக்குமதி செய்ய 6 கோடி ரூபாய் தேவைப்பட்டது. இதையடுத்து zolgensma என்கிற ஊசி மருந்து இறக்குமதி செய்யும்போது, அதில் இறக்குமதி வரியை ரத்து செய்யுமாறு பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பலர் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த நிலையில் மித்ராவின் சிகிச்சை மருந்துக்காக ரூ. 16 கோடி திரட்டப்பட்ட நிலையில் அந்த மருந்துக்கான இறக்குமதி ஜிஎஸ்டி வரியை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீக்கி அறிவித்துள்ளார். எந்த விதமான கூடுதல் வரியும் இல்லாமல் மருந்தை இந்தியா கொண்டு வரும் வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். இதனால் விரைவில் மித்ராவிற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனிடையே நிர்மலா சீதாரமனின் இந்த செயலை பாராட்டி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரான வானதி ஸ்ரீனிவாசன், “சிறுமி மித்ராவின் மருந்துக்கு இறக்குமதி வரியை ரத்து செய்து குழந்தைக்கு இன்னொரு தாயாக மாறினீர்கள்” என ட்வீட் செய்துள்ளார். மேலும் ‘ஈரோட்டை சேர்ந்த சிறுமி மித்ராவின் விலக்கு அளித்தற்கு மிக்க நன்றி’ என்றும் அவர் கூறியுள்ளார்.



Tags : Nirmala Sitharaman , சிறுமி மித்ரா
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...