×

லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவம் இடையே மீண்டும் மோதல் வெடித்ததாக வெளியான செய்திக்கு இந்திய ராணுவம் மறுப்பு!!

டெல்லி : லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே மீண்டும் மோதல் வெடித்ததாக வெளியான செய்தியை இந்திய ராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 15ம் கல்வான் பள்ளத்தாக்கு சீன ராணுவம் அத்துமீறி தாக்க முயன்ற போது, ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.இதனால் பெரும் பதற்றம் உருவானது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அப்பகுதியில் பதற்றம் தணிந்தது. ஆனால் இரு நாட்டு தரப்பிலும் ராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் லடாக்கின் கிழக்கு பகுதியில் எல்ஏசி எனப்படும் உண்மையான கட்டுப்பாட்டை கோட்டை மீறி சீன ராணுவம் புகுந்ததாகவும் அதனை இந்திய ராணுவத்தினர்கள் தடுத்தபோது பல்வேறு இடங்களில் மோதல் வெடித்ததாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது. அத்துடன் கடந்த இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகே இந்த மோதல் நடைபெற்றதாகவும் இதைத் தொடர்ந்து இந்தியா கூடுதல் படைகளை குவித்து இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது. இதனை சுட்டிக் காட்டி ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை உள்நாட்டு அரசியலுக்கு மோடி அரசு பயன்படுத்துவதாக விமர்சித்துள்ளார்.

இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா மாறிவிட்டதாகவும் ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் லடாக்கில் மீண்டும் மோதலை முற்றிலுமாக மறுத்துள்ள இந்திய ராணுவம், எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி உறுதிப்படுத்தப்படாத தகவலுடன் செய்தி வெளியிடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் இரு தரப்பு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Tags : Indian Military ,Ladakh , லடாக்
× RELATED லடாக் எம்பிக்கு வாய்ப்பு மறுத்த பாஜ