திருமலையில் நவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளது-தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் தகவல்

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையில் நவீன தொழில் நுட்பத்துடன் சிறந்த பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளது என்று தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் தெரிவித்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலின் தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் ஜவகர் நேற்று திருமலையில் உள்ள யாத்திரிகள் சமுதாய கூடம் 4ல் உள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை கூடுதல் செயல் அலுவலர் தர்மாவுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: திருமலையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பு மிகவும் சிறப்பானதாக உள்ளது.

இஸ்ரேலிய தொழில் நுட்பத்துடன் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தி நிரந்தர கட்டுப்பாட்டு  அமைக்க தேவையான சாத்தியக்கூறுகள் குறித்து திட்டமிடும்படி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன். திருமலையில் குற்றமில்லாத நகராக மாற்றுவதில் தேவஸ்தான பாதுகாப்பு பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டதக்கது.மேலும் திருமலையில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத பகுதிகளில் சிசிடிவி கேமரா அமைத்து, விரைவில்  கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட வேண்டும். திருமலையில் மிகவும் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பை அமைக்குமாறு முதன்மைப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார்.

முன்னதாக, முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி கோபிநாத், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அவர் கூறுகையில், திருமலையின் அனைத்து பகுதிகளிலும் தற்போது 1,654 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அவற்றில் 1,530 கேமராக்கள் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால்  குற்றம் சம்பவம் நடந்தவுடன் ரோந்து செல்லும் பாதுகாப்பு காவலருக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதையடுத்து அவர்கள் அங்கு சென்று குற்றங்களை கண்டறிய முடியும்.

மேலும், சேஷாச்சல  வனப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம், சாலைகள் உள்ள பகுதியில் வனவிலங்குகள் வரும்போது சிசிடிவி கேமராவில் உள்ள சென்சார் மூலம் தானாகவே  சைரன் ஒளிக்கப்பட்டு,   விலங்குகளை வனப்பகுதிக்கு  விரட்டும் விதமாக செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் ஓய்வறை, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், திருட்டு சம்பவங்கள் மற்றும் காணாமல் போனவர்களை சிசிடிவி கேமரா உதவியுடன் கண்டுபிடித்து  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் சிறந்து விளங்கிய 29 ஆண்கள் உட்பட மொத்தம் 30 தேவஸ்தான   பாதுகாப்பு பணியாளர்களை தலைமை செயல் அலுவலர் ஜவகர் வாழ்த்தி விருது வழங்கினார்.திருமலை நடைபாதையில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலிருந்து, ஏழாவது மைலில்  உள்ள பிரசன்னா அஞ்சநேய சுவாமி சன்னதி வரை, படிக்கட்டுகளில் செயல் அதிகாரி  நடந்து சென்று அங்கு நடந்து வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

மேலும், புனரமைப்பு பணிகளை இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் நடைபெற இருப்பதால், செப்டம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது டி.எப்.ஓ, முதன்மைப் பொறியாளர் சந்திரசேகர், நாகேஸ்வர், பாதுகாப்பு அதிகாரி பாலி உள்ளிட்ட  அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories:

>