×

மானாமதுரை ஆலங்குளத்தில் இறந்தவர்களை புதைக்க இடமில்லை... மயானம் அமைத்து தர மக்கள் கோரிக்கை

மானாமதுரை : மானாமதுரை அருகே ஆலங்குளம் கிராமத்தில் இறந்தவர்களை புதைக்கவோ, எரிக்கவோ மயானமின்றி கிராமமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை அருகே கல்குறிச்சி ஊராட்சிக்குட்பட்டது ஆலங்குளம் கிராமம். இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வைகை ஆற்றை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் ஆரம்ப காலத்தில், வைகை கரையில் மயானம் இருந்துள்ளது.

அதன்பின் வெள்ளக்காலங்களில் கரைகள் அரித்து சென்ற நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கிராமத்தில் இறப்பவர்களை புதைக்கவோ, எரிக்கவோ இடமின்றி வைகை கரையில் வனத்துறை நட்டுள்ள தேக்குமர பகுதியில் அடக்கம் செய்யவேண்டிய நிலை உள்ளது. மயானத்திற்கு செல்ல சரியான சாலை வசதியும் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை வாகனங்களில் இருந்து இறக்கி எரிக்கும் இடத்திற்கு சுமந்து செல்கின்றனர்.

சிலநேரங்களில் வனத்துறையினர் இவ்வழியாக பிணங்களை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிப்பதுடன் கரையோரங்களில் அடக்கம் செய்வதற்கு தடை விதித்துள்ளனர். இதனால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் ராதா கூறுகையில், ‘ஆலங்குளம் கிராமமக்களுக்கு ஆற்றின் கரையோரத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் மயானம் அமைத்து தர வேண்டும் என எம்எல்ஏ தமிழரசியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நிதியை பெற்று மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Manamadurai Alangulam , Manamadurai: Villagers in Alangulam village near Manamadurai find it difficult to bury or burn the dead.
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை அரசு பள்ளிகளில்...