×

ஜோலார்பேட்டை நகராட்சியில் மழைநீர் தேங்கிய விவசாய நிலத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு-நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க திட்ட அறிக்கைக்கு உத்தரவு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் விவசாயியின் புகார் மீது மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் செல்ல கல்வெர்ட் அமைக்கவும், குட்டைக்கு நீர் செல்ல கால்வாய் சீரமைக்க திட்ட அறிக்கையை தயார் செய்யவும் நகராட்சி ஆணையருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட குடியானகுப்பம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மைவண்ண குமார். இவருக்கு புதிய நகராட்சி அலுவலகம் அருகில் சுமார் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் இவரது நிலத்தில் சுமார் மூன்று அடி உயரம் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் இவர் விவசாயம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளானார். இதனை அடுத்து மைவண்ண குமார் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள மங்கம்மா குளம் தூர்வாரி அந்த மண்ணை எனது நிலத்தின் அருகில் 3 அடி உயரத்திற்கு கொட்டி தற்காலிக சாலை அமைத்து விட்டனர்.

இதனால் மங்கம்மா குளத்திற்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மழைநீர் செல்ல வழியில்லாமல் நிலத்தில் தேங்கி நிற்பதால் விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால் வடிகால் நீர்வரத்து கால்வாய் பகுதியை சீரமைத்து மங்கம்மா குளம் அருகில் உள்ள கணபதி குட்டைக்கு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். இதனையடுத்து, மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேற்று ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் மங்கம்மா குளம் அருகில் உள்ள விவசாயியின் நிலத்தின் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு நிலத்தில் தேங்கியுள்ள மழை நீர் நிரந்தரமாக  செல்ல கல்வெட்டு அமைக்க உத்தரவிட்டார்.

இதனை அடுத்து குடியானகுப்பம் ஏரி, கணபதி குட்டையின் கரை மற்றும் நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க திட்ட அறிக்கையினை தயார் செய்ய நகராட்சி ஆணையர் ராமஜெயத்துக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் தனபாண்டியன், மேற்பார்வையாளர் கார்த்திகேயன், சுகாதார ஆய்வாளர் உமா சங்கர் உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags : Jolarbat , Jolarpet: The District Collector will personally inspect the complaint of a farmer in Jolarpet municipal area and move on to rainwater
× RELATED ஏலகிரி மலைக்கு சென்ற அரசு பேருந்து...