வேட்பு மனுவில் தகவல்கள் மறைத்ததாக புகார் அளித்தால் அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டப் பேரவை தேர்தலின்போது, வேட்பு மனுவில் தகவல்களை மறைத்ததாக நத்தம் விஸ்வநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தால் அதை சட்டப்படி பரிசீலிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், வேட்பு மனுவில் தகவல்களை மறைத்ததாக நத்தம் விஸ்வநாதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சபாபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர்  தாக்கல் செய்த மனுவில், நத்தம் விஸ்வநாதன் ரூ.4.75 கோடி வருமான வரி செலுத்தியது தொடர்பாக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. அதேபோல், ரூ.279 கோடி வரி செலுத்தாதது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு அவரது சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரி உத்தரவு பிறப்பித்தது. இந்த  தகவல்களை நத்தம் விஸ்வநாதன் தனது வேட்புமனுவில் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். அவரது வேட்புமனுவை சரியாக ஆய்வு செய்யாமல் தேர்தல் ஆணையம் நத்தம் விஸ்வநாதனை தேர்தலில் போட்டியிட அனுமதித்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

 இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன், மனுதாரர் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தால் அந்த மனு பரிசீலிக்கப்படும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க வேண்டும். புகார் குறித்து சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு உரிய வாய்ப்பளித்து தகுந்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும். இது போன்ற புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்று பார்க்காமல் தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories:

More