×

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கோஷ்டிபூசல் உச்சக்கட்டம் எடப்பாடி பழனிசாமியுடன் மோத தயாராகும் மூத்த தலைவர்கள்: அதிமுகவில் வெடிக்கிறது பூகம்பம்

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலுக்கு பிறகு சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக அமர்ந்தது. இந்தத் தேர்தலில் படுதோல்வியடைந்த பிறகு தன்னை நோக்கி வருவார்கள்’ என எதிர்பார்த்திருந்த சசிகலாவின் கனவும் பொய்த்துப் போய்விட்டது. இந்நிலையில், சசிகலா தொண்டர்களுடன் பேசி வரும் ஆடியோ அண்மைக்காலமாக வெளியாகி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  அதிருப்தியில் இருக்கும் அதிமுகவினரிடம் சசிகலா பேசி வருகிறார். அந்தவகையில் இதுவரையில் 60க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் வெளியாகி விட்டன. இதனால் எரிச்சல் அடைந்த எடப்பாடி பழனிசாமி, ‘சசிகலா அமமுகவினருடன் மட்டுமே பேசி வருகிறார். அதிமுகவினர் யாரும் அவருடன் பேசவில்லை.

அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமே கிடையாது. அவரால் இங்கு குழப்பத்தை ஏற்படுத்த முடியாது’ என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரை தன்னை வந்து சந்திக்கும் படி சசிகலா அழைப்பு விடுத்தும் யாரும் அவரை சந்திக்கவில்லை. அதையும் மீறி சசிகலாவுடன் ஆடியோவில் பேசிய அதிமுகவினரை ஓபிஎஸ்சும்- எடப்பாடி பழனிசாமியும் கட்சியை விட்டு நீக்கி வருகின்றனர். இந்த பிரச்னை ஒருபுறம் இருக்கையில், அதிமுகவில் இரு பெரும் தலைவர்களுக்கிடையே யார் பெரியவர் என்ற மோதல் போக்கு இருந்து வருகிறது.  சட்டமன்ற எதிர்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் இருதரப்புக்கும் இடையே இந்த மோதல் போக்கு வெளிப்படையாக வெடித்தது. இருவரும் விட்டு கொடுக்காமல் இழுத்தடித்தது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மூத்த தலைவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினாலும், இருவருக்கும் இடையேயான கோஷ்டி மோதல் தொடர்ந்து வருவதாகவே அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இவர்களுக்கு இடையேயான மோதல் போக்கை பயன்படுத்தி சசிகலா அதிமுகவை கைப்பற்ற வியூகம் வகுத்தார்.  இதையறிந்த, எடப்பாடி பழனிசாமி, சசிகலாவுக்கு எதிராக அனைத்து மாவட்ட செயலாளர்களும் தீர்மானம் போட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, விழுப்புரத்தில் சி.வி.சண்முகமும், கோவையில் எஸ்.பி.வேலுமணியும், நாமக்கல்லில் தங்கமணியும், ஈரோட்டில் செங்கோட்டையன், கருப்பண்ணனும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் தென்மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் தீர்மானம் போடவில்லை.

குறிப்பாக தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் இதுவரை தீர்மானம் போடவில்லை. மதுரையில் செல்லூர் ராஜூ மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் வைத்திலிங்கம் தனது ஆளுகைக்குட்பட்ட தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றவில்லை. இதற்கு காரணம், சசிகலாவுக்கு ஆதரவு நிலை என்பதை விட எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு அதை நாம் நிறைவேற்றுவதா? என்ற மனநிலையில் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.  இதன் மூலம் ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு அணிகளும் பிளவுபட்டு நிற்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதனால், அதிமுகவில் எப்போது வேண்டுமானாலும் பூகம்பம் வெடிக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது. அதன் விளைவுகள் அதிமுகவில் பயங்கரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். இதனால் கட்சியின் நிலை எதை நோக்கி செல்லும் என்ற பீதியில் இருப்பதால் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் இதுவரை சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் போடவில்லை

Tags : Edibati Palanisami , Assembly elections, factionalism, Edappadi Palanisamy, senior leaders, AIADMK
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூரில்...