×

புது வியூகங்களை வகுத்து பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரித்து, கால்நடை வளர்க்கும் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்திட, உயர் மரபுத்திறன் கொண்ட காளைகளில் இருந்து நல்ல தரமான உறைவிந்தினை பயன்படுத்தி செயற்கைமுறை கருவூட்டல் பணியை செயல்படுத்துதல், கால்நடைகளுக்கு தேவையான அளவு பசுந்தீவன உற்பத்தியினை அதிகரித்தல், ஆகிய பணிகளை முனைப்புடன் செயல்படுத்திட வேண்டும்.

கால்நடை மருத்துவ கல்வி ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணிகளை தொய்வின்றி செயல்படுத்திடவும், கால்நடை விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களை செயல்படுத்திட வேண்டும்.  கடல் மீன்வளத்தை பாதுகாத்திடவும், அதனை முறையாக பயன்படுத்திடவும், மீன்களை சுகாதாரமாக கையாளுவதற்கு ஏதுவாக புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, புதிய தொழில் நுட்பங்கள் மூலம் உள்நாட்டு மீன் உற்பத்தி, வண்ணமீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடற்பாசி வளர்ப்பு, கடலில் கூண்டுகள் மூலம் மீன் வளர்ப்பு போன்ற மாற்று வாழ்வாதார திட்டங்களையும் முனைப்புடன் செயல்படுத்திட வேண்டும்.பால்வள துறையின் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலை கொள்முதல் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க புதிய வகையான விற்பனை வியூகங்களை வகுத்து வருவாயை பெருக்கி, செயலிழந்த பால் உற்பத்தியாளர் சங்கங்களை புதுப்பித்து, இணைய வழியில் உறுப்பினர்கள் மற்றும் நுகர்வோர்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகாண வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags : BC ,Q. Stalin , New Strategy, Dairy, Operation, Chief MK Stalin
× RELATED இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5%...