×

எண்ணூர், வடசென்னை அனல் மின் திட்டங்கள் உரிய அனுமதி பெற்ற பின்னரே பணிகள் மேற்கொள்ளப்படுகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று வெளியிட்ட அறிக்கை:
எண்ணூர் சிறப்பு பெருளாதார மண்டல மின் திட்டத்தின் கீழ் அனல் மின் உற்பத்தி மையம், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியின்படி அனுமதிக்கப்பட்டு 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக பொதுப்பணித்துறையின் அரசணை நிலை எண் 265ன் படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் செயல்படுத்துவதற்கு  தேவையான முன்அனுமதிகள், தடையில்லா சான்றுகள் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் பின்பற்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு தேவையான நிலக்கரி மற்றும் கடல்நீர் கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளும் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு, காமராஜர் துறைமுகம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் ஆகியவற்றிற்கு சொந்தமான நிலங்கள் வழியாக வடசென்னை அனல் மின் நிலையம் அலகு இரண்டிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது.

இத்திட்டத்திற்கு தேவையான அனைத்து அனுமதிகளும், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூலம் வழங்கப்பட்டு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் தொடர் கண்காணிப்பின் கீழ் அனைத்து கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும், வடசென்னை அனல் மின் திட்டம் நிலை III மற்றும் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அரசிதழின்படி ஜனவரி 2023 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அனுமதி கடிதத்தின்படி இத்திட்டம் செய்லபடுத்துவதற்கான தடையில்லா சான்றிதழ் மற்றும் அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இம்மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்கிய பின்னர், வெளியேற்றக்கூடிய சாம்பல் கழிவுகளை கொண்டு செல்ல ஏதுவாக ஒன்றிய சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அனுமதியோடு குழாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

எண்ணூரில் காஸ் அனல் மின் நிலையம்
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அளித்த பேட்டி: எண்ணூரில் காஸ் அனல் மின் நிலையம் விரைவில் அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், ரூ.130 கோடி மதிப்பீட்டில் உயர் மின் அழுத்த குறைபாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Nathur ,Vadachenya ,Minister ,Senti Balaji , Ennore, North Chennai, Thermal Power Projects, Minister Senthil Balaji
× RELATED உளுந்தூர்பேட்டையில் புதியதாக ஆய்வு...