மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு: நீதிபதி உத்தரவு

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா புழல் சிறையில் உள்ளார். அவரை காவல் நீட்டிப்புக்காக செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, அவருக்கு மேலும் 15 நாட்கள் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.  கேளம்பாக்கத்தில் உள்ள சுசில்ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா, மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜாமீன் கோரி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

 இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தமிழரசி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர் சந்தானம், சிவசங்கர் பாபா வயது மூப்பின் காரணமாகவும், ஏற்கனவே 2 முறை இதய ஆபரேஷன் செய்துள்ளதாலும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டும் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள், சிவசங்கர பாபா மீது பல்வேறு பாலியல் வழக்குகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும், அவர்மீது இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரை ஜாமீனில் விட்டால் ஆதாரங்களை அழித்துவிடுவார். எனவே, வழக்கு விசாரணை தடைபடும். இதனால் ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய 2 நாட்கள் அவகாசம் வேண்டும் என கேட்டனர். இதையடுத்து நீதிபதி தமிழரசி, ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 15ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். நீதிமன்ற காவலில் உள்ள சிவசங்கர் பாபாவை 15 நாட்களுக்கு ஒருமுறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவது வழக்கம். ஏற்கனவே ஒருமுறை ஆஜர்படுத்தப்பட்டு காவல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் 2வது முறையாக காவல் நீட்டிப்புகாக, அவரை நீதிபதி முன்பு நேற்று சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி அவருக்கு இம்மாதம் 27ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் கொண்டு செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

>