×

சில்லி பாயின்ட்...

* ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்தியக் குழுவினருடன் பிரதமர் மோடி நேற்று காணொலியில் கலந்துரையாடினார். வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், ‘எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டுமே என்ற நெருக்கடி உங்களின் செயல்பாட்டை பாதிக்க இடம் கொடுத்து விடாதீர்கள். மன உறுதியுடன் முழு திறமையையும் வெளிப்படுத்தி தேசத்துக்கு பெருமை சேர்ப்பீர்கள் என நம்புகிறேன்’ என்றார். இந்த கலந்துரையாடலை ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார். விளையாட்டு நட்சத்திரங்கள் சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), தீபிகா குமாரி (வில்வித்தை), சானியா மிர்சா (டென்னிஸ்), மேரி கோம் (பாக்சிங்), சாஜன் பிரகாஷ் (நீசல்) உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

* யூரோ கோப்பையை 53 ஆண்டுகளுக்கு பிறகு வென்று தாயகம் திரும்பிய இத்தாலி ரசிகர்களுக்கு ரோமில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த பேருந்தில் கேப்டன் ஜியார்ஜியோ சியல்லினி தலைமையிலான இத்தாலி வீரர்கள் பவனி வர, சாலையின் இருமருங்கிலும் இருந்த ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பியும், வாழ்த்தியும் வரவேற்பு அளித்தனர்.

* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் 67 வீரர்கள், 52 வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 228 பேர் கொண்ட குழுவினர் செல்ல உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா தெரிவித்துள்ளார்.

* ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் நடுவராக செயல்பட உள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை தீபக் காப்ரா பெற்றுள்ளார்.

* மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஸ்டெபானி டெய்லர் (766) மீண்டும் நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றி உள்ளார். இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் (762 புள்ளி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஸ்மிரிதி மந்தனா (701) 9வது இடத்தில் உள்ளார்.

* இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகள் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி செம்ஸ்போர்டு கவுன்டி மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

Tags : Roulette Point ...
× RELATED ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது 4 டிஎம்சி கிருஷ்ணா தண்ணீர்