×

செய்தி வெளியிடும் உரிமை விவகாரம் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.4405 கோடி அபராதம்

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் செய்தி நிறுவனங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்துக்கு பிரான்ஸ் ஒழுங்குமுறை அமைப்பு ரூ.4,405 கோடி அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது தளத்தில் மற்ற செய்தி ஊடகங்களின் செய்திகளைப் பயன்படுத்தும்போது அந்த செய்தி நிறுவனங்களுக்கு உரிய கட்டணம் அளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் சர்ச்சை உருவானது. பிரான்ஸ் நாட்டின் ஏஎப்பி உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் தங்களின் செய்திகளை கூகுள் நிறுவனம் பயன்படுத்தும்போது அதற்குரிய பணப்பலன் தர கோரிக்கை விடுத்தன. அதற்காக வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்தன. ஆனால், அதற்கு கூகுள் நிறுவனம் ஒத்துழைக்காத நிலையில் அதன் மீது புகார் தெரிவித்தன. இதையடுத்து கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பிரான்ஸ் ஏகபோக தடுப்பு முகமை இந்தாண்டு தொடக்கத்தில் வெளியிட்ட தற்காலிக உத்தரவில், செய்தி வெளியீட்டாளர்களுடன் 3 மாதங்களுக்குள் கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. ஆனால், கூகுள் நிறுவனம் இந்த உத்தரவை மதிக்கவில்லை. எனவே, அதற்கு அபராதம் விதிப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, கூகுள் நிறுவனத்துக்கு போட்டிகளுக்கான பிரான்ஸ் ஒழுங்குமுறை அமைப்பு ரூ.4405 கோடி அபராதம் விதித்தது. மேலும், செய்தி வெளியீட்டாளர்களுக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்படும் என்று 2 மாதங்களுக்குள் தெரிவிக்காவிட்டால், நாள் ஒன்றுக்கு ரூ.7.93 கோடி வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இது குறித்து கூகுள் பிரான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `இந்த முடிவு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. சில செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. இந்த சூழலில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Google , Google fined Rs 4405 crore for publishing news rights
× RELATED தவறான தகவல் பரவுவதை தடுக்க தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்தது கூகுள்