×

தேர்தல் வியூகம் குறித்து திடீர் ஆலோசனை ராகுலுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியை தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் டெல்லியில் நேற்று சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தாண்டு பாஜ ஆளும் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், கோவா, இமாச்சல் மற்றும் காங்கிரஸ் ஆளும் மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங், முன்னாள் அமைச்சரும் கிரிக்கெட் வீரருமான நவஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான உள்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அமரீந்தர் சிங், சித்து ஆகியோர், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியை தனித்தனியே சந்தித்து பல மணி நேர ஆலோசனை நடத்தினர். பாஜ மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சித்து, ஆம் ஆத்மியா  அல்லது காங்கிரசா என்ற குழப்பத்தில் இருந்த போது, பிரசாந்த் கிஷோர் தான் அவரை காங்கிரஸ் கட்சிக்கு அழைத்து வந்தார். அதே போல, கடந்த 2017ல்  பஞ்சாபில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற பிரசாந்த் கிஷோர் வியூகம்  வகுத்து கொடுத்தார். இதனால் அவருக்கும் அமரீந்தருக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது. இதனிடையே, பிரசாந்த் கிஷோர் அமரீந்தர் சிங்கை கடந்த வாரம் சந்தித்தார்.

இந்நிலையில், தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் டெல்லியில் நேற்று ராகுல், பிரியங்காவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பஞ்சாபில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை சந்திக்க கட்சியை வலுப்படுத்தவும் அமரீந்தர்-சித்துவை சமாதானப்படுத்தவும் அவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோரை சந்திப்பதற்காக பிரியங்கா காந்தி தனது உத்தர பிரதேச பயணத்தை ரத்து செய்தார். ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சமீபத்தில் 3 முறை சந்தித்தார். அதன்பின் பவார் தலைமையில் காங்கிரஸ் அல்லாத 3வது கூட்டணி அமையப் போவதாக செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து பிரசாந்த் கிஷோர், ராகுலை சந்தித்திருப்பதால் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ஆம் ஆத்மிக்கு தாவும் திட்டமா?
சித்து தனது டிவிட்டரில், ``எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி எனது தொலைநோக்கு பார்வை, பணிகளை எப்போதும் அங்கீகரித்துள்ளது. 2017ம் ஆண்டுக்கு முன்பும் கூட, போதைப்பொருள், விவசாயிகள் பிரச்சினைகள், ஊழல், மின்வெட்டு பிரச்சினைகளை முன்வைத்து கேள்வி எழுப்பியதால், யார் பஞ்சாபிற்காக உண்மையில் போராடுகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியும்,’’ என்று கூறியுள்ளார். இதனால் சித்து ஆம் ஆத்மி கட்சிக்கு தாவும் திட்டத்துடன் இந்த டிவிட்டர் பதிவை வெளியிட்டிருப்பாரோ என்று கருதப்படுகிறது.

Tags : Prashant Kishore ,Rahul , Prashant Kishore meets Rahul on election strategy
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...