பதவிக்காலம் முடிந்தும் மாநகராட்சி கட்டிடத்தில் இருப்பதா? அதிமுக மாஜி எம்பி அலுவலகத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும்: வாடகை பாக்கியையும் வசூலிக்க வேண்டும்; ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை: பதவிக்காலம் முடிந்தும் மதுரை மாநகராட்சி கட்டிடத்தில் அதிமுக அலுவலகம் வைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்த ஐகோர்ட் கிளை, உடனடியாக அதை காலி செய்ய உத்தரவிட்டுள்ளது. மதுரை, ஆனையூரைச் சேர்ந்த ஆர்.கோபாலகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அதிமுகவைச் சேர்ந்த நான், மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். தல்லாகுளம் அழகர்கோவில் மெயின் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகை அடிப்படையில் எனது சொந்த அலுவலகம் இருந்தது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டேன்.

கடந்த மார்ச் 19ல் மதுரை வடக்கு தொகுதி பறக்கும் படை சிறப்பு தாசில்தார் திடீர் சோதனையில் ஈடுபட்டார்.தொடர்ந்து மாநகராட்சி கமிஷனரின் உத்தரவின்பேரில் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தல்லாகுளம் போலீசார், தமிழ்நாடு திறந்தவெளி சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர். எந்தவிதமான நோட்டீசும் தராமல் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர். மாநகராட்சி கமிஷனரின் நடவடிக்ைக சட்டவிரோதம். எனது அலுவலகத்தின் சீலை உடைத்து, என்னிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு மூத்த வக்கீல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘எம்பியாக இருந்தபோது, அவரது அலுவலக பணிக்காக மாநகராட்சி இடம் ஒதுக்கி தரப்பட்டது. அவரது பதவிக்காலம் முடிந்தும், அந்த கட்டிடம் அவரது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இன்னும் வாடகை பாக்கி உள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர் தற்போது எந்த பதவியிலும் இல்லை. தங்களது பதவிக்காலம் முடிந்தும் எம்பி, எம்எல்ஏக்கள் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்து காலி செய்திருக்க வேண்டும். ஆனாலும், அலுவலகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் இதுபோல செயல்படலாமா? இது ஏற்புடையதல்ல. எனவே, மனுதாரர் உடனடியாக மாநகராட்சி கட்டிடத்தை காலி செய்ய வேண்டும். வாடகை பாக்கி இருந்தால் அதிகாரிகள் வசூலிக்க வேண்டும். மனுதாரரின் பொருட்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார்.

Related Stories:

>