×

ஸ்மிருதி இரானி, பூபேந்தருக்கு முக்கியத்துவம் ஒன்றிய அமைச்சரவை குழுக்கள் மாற்றம்

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சரவை குழுக்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்மிருதி இரானி, பூபேந்தர் யாதவ், சர்பானந்த சோனாவால் ஆகியோருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொடர்ந்து 2வது முறையாக கடந்த 2019ம் ஆண்டு ஆட்சி அமைத்தது. அப்போதிலிருந்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவில்லை. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சமீபத்தில் ஒன்றிய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. இதில், 15 கேபினட் அமைச்சர்கள், 28 அமைச்சர்கள் என 43 பேர் பதவி ஏற்றனர்.

அமைச்சரவை மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சரவை குழுக்களும் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையில் புதியவர்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதை போலவே முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைச்சரவை குழுக்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஸ்மிருதி இரானி, பூபேந்தர் யாதவ், சர்பானந்த சோனாவால் ஆகியோருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

* பிரதமர் மோடி தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் ஸ்மிருதி இரானி, பூபேந்தர் யாதவ், சர்பானந்த சோனாவால் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த குழுவில் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, நரேந்திர சிங் தோமர், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், கிரிராஜ் சிங், மனுசுக் மாண்ட்வியா, ஆகியோர் உள்ளனர்.
* பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில், வீரேந்திர குமார், கிரண் ரிஜ்ஜூ, அனுராக் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஏற்கெனவே இந்த குழுவில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் உள்ளனர்.
* பிரதமர் தலைமையிலான முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை குழுவில் நாராயன் ரானே, ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அஸ்வின் வைஸ்ணவ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
* பிரதமர் தலைமை வகிக்கும் வேலைவாய்ப்பு மற்றும் தனி நபர் பயிற்சிக்கான அமைச்சரவை குழுவில், அஸ்வினி வைஸ்ணவ், பூபேந்தர் யாதவ், ராமச்சந்திர பிரசாத் சிங் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
* பாதுகாப்பு தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைச்சரவை குழுவில் மட்டும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த குழுவில் பிரதமர் மோடி, ராஜ்நாத், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
* அதே போல பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் மட்டும் இடம்பெற்றுள்ள நியமனத்திற்கான அமைச்சரவை குழுவிலும் மாற்றம் செய்யப்படவில்லை.

Tags : Smriti Irani ,Bhubaneswar , Smriti Irani, Bhubaneswar, Union Cabinet Committee
× RELATED சென்னையில் நாளை வாக்கு சேகரிக்கிறார் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி..!!