×

சித்தாமூர் ஒன்றியம் கடப்பேரி கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

செய்யூர்: சித்தாமூர் ஒன்றியம் கடப்பேரி  கிராமத்தில் உள்ள புறம்போது இடத்தில் சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கி தரவேண்டும் என கிராம பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் நெற்குணம் ஊராட்சி கடப்பேரி கிராமம், காலனி பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி, மக்களுக்கு தனி சுடுகாடு இல்லை. இதனால், கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் இறந்தவர்களின் சடலங்களை, அக்கிராமத்தின் அருகே உள்ள ஏரிக்கரை பகுதிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்கின்றனர். மேலும், ஏரிக்கரைக்கு செல்ல பாதையும் இல்லாததால், அங்கு வசிக்கும் தனிநபர்களுக்கு சொந்தமான பயிர் நிலங்களில் இறங்கி, சடலங்களை தூக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கிராம பொதுமக்கள் கூறுகையில், ‘பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் 20 முதல் 30 குடும்பத்தினர் மட்டுமே வசித்தனர். இதனால், எங்கள் பகுதிக்கு சுடுகாடு அமைத்து கொடுக்கவில்லை. மாறாக ஏரிக்கரையோரம் இறந்தவர்களை அடக்கம் செய்து கொள்ளுங்கள் என கூறி விட்டனர். அப்பகுதிக்கு சடலங்களை கொண்டு செல்ல பாதை இல்லாததால் பயிரிடப்படாத நிலங்கள் வழியாக இறந்தவர்களை கொண்டு சென்று அடக்கம் செய்தோம். ஆனால், தற்போது இங்கு குடியிருப்புகளும் அதிகரித்ததுடன், வழிப்பாதையாக பயன்படுத்திய நிலங்களும் விற்பனையாகிவிட்டது.

இதனால், ஒவ்வொரு இறப்பின்போதும், அந்தநிலத்தை உரிமையாளர்களிடம் பல்வேறு போராட்டங்கள் நடத்தி அனுமதி வாங்கிய பின்னரே, சடலங்களை அவ்வழியாக கொண்டு செல்ல வேண்டியுள்ளது. மேலும், ஏரிக்கரையை கடந்து சுடுகாட்டுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் மழை காலங்களில் சேற்றிலும் சகதியிலும் ஏரிக்கரையின் மீது ஏறவும் முடியாமல் பெரும் சிரமம் அடைகிறோம். மழைக்காலத்தின்போது ஏரியில் தண்ணீர் நிரம்பிய பின்னர் புதைக்கப்பட்ட சடலங்கள் நீரில் மிதக்கும் அவலநிலையும் உள்ளது. எனவே, கிராம நுழைவு சாலை அருகே காலியாக உள்ள புறம்போக்கு நிலத்தில் எங்களுக்கு சுடுகாடு அமைத்து தரக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், நடவடிக்கை இல்லை. எனவே குறிப்பிட்ட புறம்போக்கு நிலத்தில் எங்கள் கிராம மக்களுக்கு சுடுகாடு அமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Sidthamur Union ,Kadappari , Siddamoor Union should allocate space for fire on outlying land in Kadapperi village: Public insistence
× RELATED அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்