ஆடி, பக்ரீத் பண்டிகையையொட்டி திருப்புவனத்தில் களைகட்டிய ஆட்டு சந்தை

திருப்புவனம்: ஆடி, பக்ரீத் பண்டிகையையொட்டி திருப்புவனத்தில் ஆட்டுச்சந்தை களைகட்டியது. ஆடிமாதம் வரும் 17ம் தேதி பிறப்பதாலும், இதைத்தொடர்ந்து பக்ரீத் பண்டிகை வருவதாலும் மாமிச பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். தலை ஆடி கிராமப்புறங்களில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும். திருமணமான புது தம்பதிகளை பெண் வீட்டார் தங்கள் வீட்டுக்கு அழைத்து புது மாப்பிள்ளைக்கு கறி விருந்து தருவது வழக்கம். விருந்தில் பெரும்பாலும் ஆடு, நாட்டுக்கோழிகளே பிரதானமாக இருக்கும். ஆடிபிறப்பை முன்னிட்டு கிராமப்புற சந்தைகளில் ஆடு, கோழி விற்பனை களைகட்டியுள்ளது. திருப்புவனத்தை சுற்றிலும் 45 ஊராட்சிகளை சேர்ந்த 163 கிராமங்கள் உள்ளன. கிராமப்புற விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழிகளை சந்தையில் விற்பனை செய்து விட்டு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். திருப்புவனம் சந்தையில் சராசரியாக 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும்.

கொரோனா பரவல் காரணமாக சந்தை கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் பலரும் மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர். நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால்தான் சந்தை சேதுபதி நகர் பகுதியில் மாற்றப்பட்டது. புறநகருக்கு வெளியே நான்குவழி சாலையும் அமைக்கப்பட்டது. ஆடி, பக்ரீத் பண்டிகையையொட்டி அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான ஆடுகளும், வியாபாரிகளும் கூடியதால் போக்குவரத்துக்கு ஏற்பட்டது. கொரோனா தடையால் ஆட்டு சந்தை நான்கு சாலையில் நடப்பதை தடுத்து சேதுபதி நகர் பகுயியில் நடத்தினால் போக்குவரத்துக்கு சிரமம் இல்லாமல் இருப்பதோடு பேரூராட்சிக்கு வருமானமும் கிடைக்கும். அனுமதியின்றி கூடும் சந்தையால் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சேதுபதி நகர் பகுதியில் சந்தையை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>