×

சிறப்பான செயல்பாட்டால் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ள பள்ளி என்ற பெருமையை பெற்ற காரைக்குடி நகராட்சி தொடக்கப் பள்ளி..!

காரைக்குடி: காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப் பள்ளி தனது சிறப்பான செயல்பாட்டாலும் ஆங்கில வழி கல்வியினாலும் பெற்றோர்களை கவர்ந்து, அப்பகுதி கல்லூரிகளுக்கு இணையாக மாணவர்கள் சேர்க்கையில் ஆயிரத்தையும் தாண்டிய எண்ணிக்கையை பதிவுசெய்து தற்போது சாதனை படைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டி.டி.நகரில் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளி. தொடக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது உயர்நிலைப் பள்ளியாக இது செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கு தற்போது தொடக்கப்பள்ளிக்கென தனி இடம் ஒதுக்கப்பட்டு புதிய கட்டிடடத்தில் வகுப்பறைகள், பயோ டாய்லெட்டுகள், விளையாட்டு திடல் என தனியார் பள்ளிகளுக்கு நிகராக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஆங்கில வழிக்கல்வியும் கற்பிக்கப்படுவதால், பெற்றோர்கள் இப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க ஆர்வத்துடன் முன்வருகின்றனர்.  தமிழ்நாட்டிலேயே 1,200 என்ற எண்ணிக்கையில் அதிக மாணவர்களை சேர்த்த தொடக்கப்பள்ளி என்ற பெயரை இப்பள்ளி தற்போது பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மாணவர்களை பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் அலை மோதுவதால், இடவசதி இல்லாமல் மாணவர்களை சேர்க்க முடியவில்லை என்று ஆதங்கம் தெரிவிக்கின்றனர் பள்ளி நிர்வாகத்தினர். இந்த சிக்கலை தவிர்க்க, பள்ளி வளாகத்தில் காலியாக இருக்கும் இடத்தில், கூடுதல் கட்டிடங்களை கட்டி அதன்மூலம் மேலும் 600 மாணவர்கள் வரை சேர்க்க முடியும் என யோசித்துள்ளனர் நிர்வாகிகள்.தங்களின் இந்த யோசனையை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடமும், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியிடமும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரானா தொற்று பேரிடர் காலம் என்று கூட பார்க்காமல், தற்போது தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதில் ஆர்வம் காட்டிவருவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியான சூழ்நிலையில், இது போன்ற அரசு பள்ளிகள் பெற்றோர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. ஏழை, எளிய மாணவர்களின் பெற்றோர்களின் நலன்கருதி இப்பள்ளிக்கு விரைவில் கூடுதல் கட்டிடம் கட்டிதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி பாலுமுத்துவிடம் கேட்ட போது, கூடுதல் கட்டிடங்கள் கட்டி மாணவர்களை சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Tags : Municipal Elementary School for Karaku , Karaikudi Municipal Primary School is proud to be the school with the highest number of students due to its excellent performance ..!
× RELATED மறுவாழ்வு சிகிச்சை மையம்: 5 பேர் தப்பி ஓட்டம்