இமாச்சல பிரதேசத்தை புரட்டி போட்டது கனமழை: தேசிய நெடுஞ்சாலைகளில் வெள்ளம் போக்குவரத்து அடியோடு துண்டிப்பு..! களம் இறங்கியது பேரிடர் மீட்புக்குழு

சிம்லா: இடைவிடாமல் கொட்டும் கனமழையால் இமாச்சல பிரதேச மாநிலம் காங்கரா, சிம்லா, சம்பா உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. தர்மசாலா உள்பட மாநிலத்தின் பல நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், தர்மசாலாவுக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்றும் மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழை துவங்கியால் நாட்டில் பல மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதில் இந்த 2 மாநிலங்களிலும் மின்னல் தாக்கி 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி முதல் இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

முன்னதாக இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டக் கூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுத்திருந்தது. இந்நி்லையில் நேற்று முன்தினம் இமாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக சிம்லா, காங்ரா, சம்பா, மண்டி, சிர்மவுர் உள்ளிட்ட மாவட்டங்களில் வானம் கிழிந்தது போல் இடைவிடாமல் மழை ஊற்றியது. இதனால் தர்மசாலா உட்பட பல நகரங்களில் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும் சிம்லாவின் மலைப்பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்காலும், நிலச்சரிவுகளாலும் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட பெரும்பாலான முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சண்டிகர்-மணாலி தேசிய நெடுஞ்சாலை மற்றும் பைபாஸ் சாலை, மணாலி-லே தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சாலைகளிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மண்டி மாவட்டத்தில் 4 வீடுகள் அடியோடு இடிந்து விழுந்து விட்டன என்றும் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் பகுதியளவு பாதிப்பு என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் பல பகுதிகளில் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இன்றும் மழை பெய்யும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே தங்கியுள்ள இடங்களை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சேதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக இந்த கனமழையால் காங்கரா மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேற்று காலை முதல் பேரிடர் மீட்பு குழுவினர், மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மீட்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More