பாணாவரம் மார்க்கெட் கமிட்டியில் தொடர் மழையால் நெல்மூட்டைகள் சேதம்-அதிகாரிகளுக்கு கலெக்டர் கண்டிப்பு

பாணாவரம் :  பாணாவரம் அருகே உள்ள மார்க்கெட் கமிட்டியில் மழையில் நனைந்து சேதமான நெல்மூட்டைகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள  கோடம்பாக்கம் கிராமத்தில் சுமார் 7.5 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்  சார்பில் திறந்தவெளி மார்க்கெட் கமிட்டி திறக்கப்பட்டது. இந்த மையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டு பாதுகாக்கபடுகிறது.

இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக இப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் நெல் மூட்டைகள் மீது மூடி வைக்கப்பட்டிருந்த தார்ப்பாய்கள் கிழிந்தன.

இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென வந்த கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மார்க்கெட் கமிட்டியில் ஆய்வு செய்தார்.  அப்போது தார்ப்பாய்கள் கிழிந்து, உரிய பாதுகாப்பற்ற நிலையில் நெல் மூட்டைகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததைக் கண்டு அதிகாரிகளை கண்டித்தார்.

மேலும், திறந்தவெளியில் கிடக்கும் நெல் மூட்டைகளை, பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது நெமிலி தாசில்தார் சுமதி மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories:

>