வேலூர், திருவண்ணாமலை உட்பட 4 மாவட்டங்களுக்கு 40,500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி ஒதுக்கீடு-முகாம்களில் ஆர்வத்துடன் குவியும் பொதுமக்கள்

வேலூர் : வேலூர், திருவண்ணாமலை உட்பட 4 மாவட்டங்களுக்கு 40,500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்.தமிழகத்தில் கொரோனா 2வது அலை தடுப்பு நடவடிக்கைகளில் தடுப்பூசி போடும் பணி பிரதானமாக நடந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 47 ஆயிரத்து 591 பேருக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி இருப்பு இல்லாததால் டெல்லியில் இருந்து தடுப்பூசி ஒதுக்கீடு வந்த பின்னரே தடையின்றி தொடரும் என்ற இக்கட்டான சூழல் நிலவியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தமிழகத்திற்கு மொத்தம் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தடுப்பூசிகள் உடனுக்குடன் அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி வேலூர் மாவட்டத்துக்கு 9 ஆயிரம் டோஸ்களும், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு தலா 7 ஆயிரம் டோஸ்களும், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 19 ஆயிரத்து 500 டோஸ்களும் என மொத்தம் 40 ஆயிரத்து 500 டோஸ்கள் ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இரண்டு நாள் இடைவெளிக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் வேலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 9 ஆயிரம் டோஸ்களில் 4 ஆயிரம் டோஸ்கள் வேலூர் மாநகராட்சிக்கும், 5 ஆயிரம் டோஸ்கள் மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகள் வேலூர் மாநகராட்சியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஜெயராமச்செட்டித்தெரு, சத்துவாச்சாரியில் உள்ள தனியார் பள்ளி என 10 மையங்கள் உட்பட வேலூர் மாவட்டம் முழுவதும் 25 மையங்களில் போடும் பணி தீவிரமடைந்துள்ளது என்று சுகாதாரப்பணிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி இல்லாமல் இருந்தது. இதனால் முகாம்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது கோவிஷீல்டு வந்துள்ளதால் சிறப்பு முகாம்களில் குவியும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். அதேபோல் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும் தடுப்பூசிகள் வந்ததால், தடையின்றி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>