டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி ₹6.60 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்-கர்நாடகாவை சேர்ந்தவர் கைது

சித்தூர் : டில்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்ய குடோனில் பதுக்கிய ₹6.60 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட எஸ்பி செந்தில்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

கடப்பா- சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பீலேரு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாதிக்அலி, சப்-இன்ஸ்பெக்டர் திப்பேசாமி மற்றும் போலீசார் கடந்த 10ம் தேதி தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காரில் 8 செம்மரக்கட்டைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், கர்நாடக மாநிலம், ஆணைகால் தாலுகா ஆடிகாரகலஅல்லி கிராமத்தை சேர்ந்த இம்ரான்கான்(29) என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா பொம்மனஹள்ளி கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான ஒரு குடோனில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மதனப்பள்ளி டிஎஸ்பி ரவி மனோகராச்சாரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அக்குடோனில் பழைய இரும்பு சாமான்களுக்கு அடியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்தது தெரியவந்தது. உடனடியாக, அங்கிருந்த 238 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், அங்கிருந்த 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 8.2 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் ₹6 கோடியே 60 லட்சம் மதிப்பாகும். தலைமறைவான தமிழகத்தை சேர்ந்த ரவி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் திருப்பதி அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை கூலியாட்களை வைத்து வெட்டி ரவி காரில் கடத்தினார். ஓசூரில் உள்ள குடோனில் பதுக்கி வைத்துள்ளார். பின்னர், கண்டனர் லாரிகள் மூலம் டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளார்.

அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது. இவ்வாறு அவர் கூறினார். இதில், ஏஎஸ்பிகள் மகேஷ்,   ரிசாந்த், மதனப்பள்ளி டிஎஸ்பி ரவி மனோகராச்சாரி, இன்ஸ்பெக்டர் சாதிக்அலி, சப்-இன்ஸ்பெக்டர் திப்பேசாமி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசாருக்கு எஸ்பி செந்தில்குமார் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

செம்மரக்கட்டை கடத்தலை நிரந்தரமாக தடுக்க வேண்டும்

திருப்பதி அடுத்த சேஷாசலம் மற்றும் தலகோணா வனப்பகுதிகளில் அதிக அளவில் செம்மரங்கள் உள்ளது. இந்த செம்மரங்களை தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த கூலியாட்களை வைத்து சிலர் வெட்டுகின்றனர். பின்னர், லாரி மற்றும் வேன்களில் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். போலீசார் சோதனையில் ஈடுபடும்போது கடத்தப்படும் செம்மரக்கட்டைகள் மற்றும் செம்மரக்கட்டைகளை கடத்தும் கூலியாட்களை கைது செய்து வருகின்றனர். ஆனாலும், தொடர்ந்து செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை நிரந்தரமாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

முதல் முறையாக ₹6.60 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது வேன், கார் மற்றும் லாரிகளில் கடத்தப்படும் செம்மரக்கட்டைகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக சிலரை கைது செய்து வருகின்றனர். இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பபை விட ஓசூரில் பறிமுதல் செய்யப்பட்ட ₹6.60 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளே அதிகம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>