அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திருச்சுழி அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டர் ‘ரெடி’-அமைச்சர் அதிரடி நடவடிக்கை

திருச்சுழி : திருச்சுழியை சுற்றியிலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் நோய் தொற்று ஏற்பட்டலோ, பாம்பு கடி, விபத்து ஏற்பட்டலோ திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும். ஆனால், திருச்சுழி அரசு மருத்துவமனையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சரிவர இயங்காமல் சிறு காயங்கள் ஏற்பட்டால் கூட அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர். மேலும் இரவு நேரத்தில்  மருத்துவர்கள் இல்லாததால் உள் நோயாளிகள் வரத்து சிறிது, சிறிதாக குறைந்து முற்றிலும் நோயாளி வருவது குறைந்தது.

கடந்த பத்து வருடங்கள் முன்பாக திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனை மேல்தளத்தில் அறுவைசிகிச்சை உபகரணங்களோடு திறந்து வைக்கப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் முற்றிலும் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டன. இதனால் பொதுமக்கள் சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றாலும் கூட அருப்புக்கோட்டை, விருதுநகர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா தொற்று குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திருச்சுழி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார். அப்போது அறுவை சிகிச்சை அரங்கம் செயல்படாமல் உள்ளதாக பொதுமக்கள் கூறியதைடுத்து உடனடியாக செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதன் விளைவாக தற்போது சிறப்பு அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் உபகரணங்கள் வசதிகள்  ஏற்படுத்தப்பட்டு காது,மூக்கு,தொண்டை,குடல் இறக்கம், குடல்வால், கொழுப்பு கட்டி, பெண்களுக்கு கருத்தடை, தைராய்டு சுரப்பி உள்பட பல பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் திருச்சுழி அரசு மருத்துவமனையில் தயார்நிலையில் உள்ளன. அமைச்சர் உத்தரவால் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அவருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

Related Stories: