×

மதுரையில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 581 கட்டிடங்களை அகற்றும் பணி தீவிரம்

மதுரை: மதுரை முல்லைநகரில் நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. மதுரையின் மையப்பகுதியில் விபி குளம் அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் 22 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் இருந்தது. காலப்போக்கில் இந்த கண்மாய் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு கிட்டத்தட்ட 1 ஏக்கர் பரப்பளவிற்கு இந்த கண்மாய் குறைந்துவிட்டது. இந்த கண்மாயின் கரைகளில் முல்லை நகர் என்ற பெயரில் சாலை முழுவதுமாக கிட்டத்தட்ட 580க்கும் மேற்பட்ட வீடுகள் விரோதமாக கட்டப்பட்டிருந்தன.

40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சட்டப்பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே மதுரை உயர்நீதிமன்ற கிளை இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற வந்த போது இந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சாலைகளில் மறியலில் ஈடுபட்டதால் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்ற பணி கைவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியருடன் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில் முதற்கட்டமாக இந்த பகுதியில் வணிக சம்மந்தமாக இருக்கக்கூடிய கட்டிடங்கள் அதாவது சிறிய கடைகள், கார் செட்டுகளை அகற்றுவதற்கு இந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஏற்றுக்கொண்டனர். அதன் அடிப்படையில் இன்று காலை சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் மதுரை மாநகராட்சி வருவாய் துறையை சேர்ந்த அதிகாரிகள் 6 பொக்லைன் இயந்திரங்களுடன் தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று சுமார் 2 கி.மீ நீளத்திற்கான பணி நடைபெற இருக்கிறது. மதுரையின் மையப்பகுதியில் மிகப்பெரிய அளவில் நடைபெறும் இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் பணி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Madurai , madurai
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...