×

திண்டுக்கல் அருகே நிதி நிறுவனம் நடத்தி அதிமுக கூட்டுறவு வங்கி தலைவர் பல கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி ஆபீசில் புகார்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு வங்கி தலைவர் நிதி நிறுவனம் நடத்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கோவிலூர் அருகே ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். அதிமுகவை சேர்ந்த இவர், விவசாய அணியில் பொறுப்பிலும், ராமநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் உள்ளார். இவர் கோவிலூரில் நகை அடகு கடை, பைனான்ஸ், சீட்டு கம்பெனியை பல வருடங்களாக நடத்தி வருகிறார். ரூ.1 லட்சம் முதல் 5 லட்சம் வரை சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் பெற்றுள்ளார். மாதந்தோறும் வட்டி தருவதாக டெபாசிட் தொகையும் பெற்றுள்ளார். இவரது அடகுக்கடையில் ஏராளமானோர் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக ஜெயச்சந்திரன் மாயமானார். இவரைப் பற்றிய தகவல் கிடைக்காத நிலையில், பணம் கட்டியவர்கள் அவரது வீட்டிற்கு சென்றால், அங்கே ஆட்களை வைத்து மிரட்டுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணம் கட்டிய 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். பாதிக்கப்பட்டோர் கூறுகையில், ‘‘கோவிலூர், ராமநாதபுரம் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் சுமார் ரூ.4 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்துள்ளார். அவரை கைது செய்து, அவரிடமிருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்’’ என்றனர்.


Tags : AIADMK ,Dindigul , Dindigul, Financial Institution, AIADMK, Co-operative, Fraud
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...