×

டெல்லியில் போராடும் விவசாயிகள் உபி, உத்தரகாண்ட் தேர்தலில் பாஜவை எதிர்த்து போட்டியா?

புதுடெல்லி:  உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜவை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் களமிறங்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.  மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக பல மாநில விவசாயிகள் டெல்லியில் கடந்த 8 மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய விவசாயிகள், அடுத்த கட்டமாக பாஜவை தேர்தல் களத்தில் நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜ ஆட்சியில் இருப்பதால் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டுகிறது. இந்த தேர்தலில் பாஜவை எதிர்த்து போட்டியிட டெல்லி போராட்ட விவசாயிகள் ஆலோசித்து வருகின்றனர். குறிப்பாக, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் தேர்தல்களில் களமிறங்க காத்திருக்கின்றனர். இது தொடர்பாக டிவி ஒன்றுக்கு பேட்டியளித்த விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், ‘‘தேர்தல்களில் வாக்களித்து வெற்றி பெற வைப்பது விவசாயிகள். அந்த விவசாயிகள் தேர்தல்களில் போட்டியிடுவது மட்டும் எப்படி தவறாகும்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Delhi ,BJP ,UP ,Uttarakhand ,elections , Delhi, Farmers
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...