×

தங்கம் கடத்தலில் எதிர்கட்சி தலைவர்கள் பெயரை கூற மிரட்டல்: சிறையில் சொப்னா உயிருக்கு ஆபத்து?: வேறு மாநிலத்திற்கு மாற்ற ஆலோசனை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா, சரித்குமார், ரமீஸ் உயிருக்கு ஆபத்து இருப்பதால் வேறு சிறைக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சல் மூலம் கோடிக்கான மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுங்க இலாகா, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் அமீரக தூதரகத்தில் துணை தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ெசாப்னா, தூதரக உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்த சரித்குமார் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் சொப்னா, சரித்குமார் மற்றும் துபாயில் இருந்து தங்கம் கடத்துவதற்கு உதவி செய்த ரமீஸ் ஆகியோர் மீது காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கேரளாவில் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் திருவனந்தபுரம் மத்திய சிறையில் மட்டும் தான் அடைக்கப்பட வேண்டும். அதன்படி 3 பேரும் அங்கு அடைக்கப்பட்டனர். இவர்களது காவல் நீட்டிப்பு தொடர்பான விசாரணையின் போது சரித்குமார் நீதிபதியிடம் திடுக்கிடும் தகவல்களை கூறினார். நீதிமன்றத்தில் அவர் கூறியதாவது: தங்கம் கடத்தலில் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னித்தலா, பாஜ தலைவர் சுரேந்திரன், மத்திய அமைச்சர் முரளிதரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூற வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள் என்னை மிரட்டுகின்றனர். இவர்களுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மிரட்டுவதாகவும் கூறினார்.

இந்த நிலையில், சொப்னா உயிருக்கு சிறை அதிகாரிகளால் ஆபத்து இருப்பதால் அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சொப்னாவின் தாய் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார். இதையடுத்து ெசாப்னா, சரித்குமார், ரமீஸ் ஆகியோரை வேறு மாநில சிறைக்கு மாற்றுவது குறித்து சுங்க இலாகா ஆலோசித்து வருகிறது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags : Sopna , Gold smuggling, opposition leaders, advice
× RELATED ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெற கூறி...