×

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிப்பதால் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு

புதுடெல்லி:  ‘சாத்தான்குளம் தந்தை மகன் கொலை தொடர்பான வழக்கு சிபிஐ தரப்பில் விசாரித்து வரப்படுவதால், அதில் எங்களுக்கு எந்தவித பங்கும் இல்லை’ என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் (ஜெயராஜ், பென்னிக்ஸ்) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இது சம்பந்தப்பட்ட பிரதான வழக்கு மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடர் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காவலர் ரகு கணேஷ் தரப்பில் மேல்முறையீட்டு மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வழக்கை கேரள மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவு மற்றும் மதுரை கூடுதல் அமர்வில் இருக்கும் விசாரணை ஆகியவைக்கும் தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமம் தமிழக அரசு பதிலளிக்க கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் வழக்கை சிபிஐ விசாரித்து வருவதால் தமிழக அரசுக்கு அதில் எந்த பங்கும் கிடையாது. வழக்கு விசாரணையும் சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதேப்போன்று சிறையில் இருக்கும் ரகு கணேஷ் அங்கு தாக்கப்படுவதாக கூறுவதில் உண்மைத்தன்மை கிடையாது. அதனால் இதுதொடர்பான வழக்கை கேரள மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற அவரது மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : CBI ,Satankulu ,TN Government ,Supreme Court , Sathankulam, Case, CBI, Government of Tamil Nadu
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...