×

யூரோ கோப்பை கால்பந்து: 2வது முறையாக இத்தாலி சாம்பியன்

லண்டன்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இத்தாலி அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. லண்டன், வெம்ப்ளி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், இங்கிலாந்து வீரர் லூக் ஷா 2வது நிமிடத்திலேயே அபாரமாக கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை கொடுத்தார். பந்தை கடத்திச் செல்வதிலும், கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் மிகச்  சிறப்பாக செயல்பட்ட இத்தாலி வீரர்களால், இங்கிலாந்து தற்காப்பு அரணை  முறியடித்து கோல் அடிக்க முடியவில்லை. இடைவேளை வரை இதே நிலை நீடித்தது.

இரண்டாவது பாதியில் தாக்குதலை தீவிரப்படுத்திய இத்தாலி அணிக்கு, 67வது நிமிடத்தில் லியோனார்டோ போனுக்சி கோல் அடித்து 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியதை அடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், இத்தாலி 3-2 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தி 2வது முறையாக யூரோ கோப்பையை முத்தமிட்டது. 55 ஆண்டுகளாக பெரிய தொடர் எதிலும் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் தவித்து வரும் இங்கிலாந்து அணியின் காத்திருப்பு இன்னும் நீடிக்கிறது.  இத்தாலி அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.


Tags : Euro Cup , Euro Cup, Italy, Champion
× RELATED யூரோ கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றில் டென்மார்க், பெல்ஜியம், ஆஸ்திரியா