×

உ.பி, ம.பி, ராஜஸ்தானில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 68 பேர் பரிதாப பலி: செல்பி எடுத்த 11 பேர் கருகினர்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நேற்று முன்தினம் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பிரயாக்ராஜில் மட்டும் 14 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள், பெண்கள். 250 கால்நடைகள், விலங்குகள் மின்னலுக்கு பலியாகி உள்ளன.  இதேபோல் ராஜஸ்தானிலும் மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெய்ப்பூரின் அமேரில் 12ம் நூற்றாண்டு  பழமைவாய்ந்த கோட்டை முன் சிலர் மின்னல் வெட்டும் போது செல்பி எடுக்க முயன்றுள்ளனர்.

அப்போது செல்போன் சிக்னல்கள் காரணமாக அவர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் காண்காணிப்பு கோபுரத்தில் இருந்த பலர் பயத்தில் அலறியடித்து கீழே குதித்துள்ளனர். செல்பி எடுக்க முயன்றபோது 11 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இது  தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கிய சம்பவங்களில் 9 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 7 பேர் சிறுவர்கள். மத்தியப்பிரதேசத்தில் ஷியோபூர், குவாலியர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  மின்னல்  தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் 2லட்சம் நிதி உதவியை அறிவித்துள்ளார். ஒரே நாளில் மின்னல் தாக்கி 68 பேர் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : UP, MP ,Rajasthan , Uttar Pradesh
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்