×

இந்திய வம்சாவளி சிரிஷா பேட்டி: விண்வெளி பயணத்தில் வியக்கத்தக்க அனுபவம்

ஹூஸ்டன்: விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் யூனிட்டி 22 விண்கலம் நேற்றுமுன்தினம் விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக திரும்பியது. இதில் அந்நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன் உடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிரிஷா பந்த்லா உட்பட 5 பேர் சென்றனர். சிரிஷா ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்தவர்.  இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிரிஷா கூறியதாவது: இன்னும் விண்வெளியில் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால், பூமியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நம்பமுடியவில்லை என்ற வார்த்தையை தவிர வேறு ஏதாவது சிறந்த வார்த்தை இருக்கிறதா என்று யோசிக்கிறேன். ஆனால், அந்த ஒரு வார்த்தை மட்டுமே வந்து போகிறது. விண்வெளியில் இருந்து பூமியை பார்ப்பது ஒரு வியக்கத்தது மட்டுமின்றி ஓர் மாறுபட்ட அனுபவம்.  விண்வெளி வீரராக ஆசைப்பட்டேன். என்னால் நாசா செல்ல முடியவில்லை. எனது பார்வை குறைபாட்டினால், விண்கலத்தை செலுத்தும் நாசா விமானியாகவோ அல்லது விண்வெளி வீரராகவோ முடியவில்லை. அதனால், விண்வெளி செல்ல வழக்கத்துக்கு மாறான வழியொன்றை தேர்ந்தெடுத்தேன். இதுவொரு புது அனுபவமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

குவியும் வாழ்த்து
சிரிஷாவின் தாத்தா பந்த்லா ராகையா மற்றும் குடும்பத்தினர் குண்டூரில் வசித்து வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் சிரிஷாவின் விண்வெளி பயணத்தை யூடியூப் வாயிலாக நேரில் கண்டுகளித்தனர். சாதனை படைத்த சிரிஷாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது டிவிட்டரில், ``இந்த சாதனை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படிக்கும் பல இளம் பெண்களுக்கு உந்துதலாக இருக்கும்,’’ என்று கூறியுள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், ``சிரிஷாவால் இந்த மாநிலம் பெருமை அடைகிறது,’’ என்றார்.

Tags : Indian Descent, Sirisha, Interview, Space
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐநா பொதுச்செயலாளர் கருத்து