×

வரும் 19ல் தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட தனிநபர் மசோதா தாக்கல்?: 40 மசோதா: 5 அவசர சட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதில், மக்கள் தொகை கட்டுப்பாடு, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்ய பாஜ எம்பிக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற பெயரில் பாஜ ஆளும் மாநிலங்களில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. அசாம், உபியில் இச்சட்டம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதல் வாரத்திலேயே, உபி மக்களவை எம்பி ரவி கிஷன் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்பி. கிரோரி லால் மீனா ஆகியோர் மக்கள்தொகை கட்டுப்பாடு, பொது சிவில் சட்டம் தொடர்பாக தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இருவரும் தங்களது தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்ய ஜூலை 24ம் தேதி வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல, பாஜ மாநிலங்களவை எம்பி. ராகேஷ் சின்காவும் மக்கள் கட்டுப்பாடு குறித்த தனிநபர் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அமைச்சர் அல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தாக்கல் செய்யப்படும் மசோதா தனிநபர் மசோதா என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பொது சிவில் சட்டம், மக்கள் தொகை கட்டுப்பாடு இரண்டுமே சர்ச்சைக்குரியவை என்பதால், இதற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பும். மழைக்கால கூட்டத் தொடரை ஒட்டி நாடாளுமன்றத்தில் நடக்கும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறும். காலை 11 மணி முதல் 6 மணி வரை இரு அவைகளும் இயங்கும். கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தேவையான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு எம்பிக்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு்ள்ளது. இம்முறை கூட்டத் தொடரில் பங்கேற்க ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை. கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் மட்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் யார்?
மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருந்து வருகிறார். இவர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்பதவியில் ராகுல் காந்தி நியமிக்கப்படுவார் என முதலில் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இது மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஜி-23 தலைவர்கள் எனப்படும் சில மூத்த தலைவர்களில் யாருக்காவது இப்பொறுப்பு தரப்படும் என தெரிகிறது. இப்போட்டியில் சசிதரூர், மணிஷ் திவாரி, கவுரவ் கோகாய், ரவ்னீத் சிங் பிட்டு, உத்தம் குமார் ரெட்டி ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.


Tags : Rainy season meeting series
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...